சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு இரு நாட்கள் கூடியது

  • இலங்கையின் தேசிய சரணாலயங்களின் நிர்வாகங்கள் முகங்கொடுக்கும் தடைகள், சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து குழுவில் அவதானம்
  • மீனவ சமூகங்களினால் பயன்படுத்தப்படும் மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது
  • கடந்த சில ஆண்டுகளில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நடைமுறை மற்றும் விலை நிர்ணயம் குறித்தும் குழு ஆராய்ந்தது

சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி அவர்களின் தலைமையில் 2026.03.04 மற்றும் 2026.03.05 ஆகிய இரு தினங்கள் கூடி, உரிய கவனம் செலுத்தப்பட வேண்டிய பல்வேறு துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியது.

இதற்கு அமைய இலங்கையின் சரணாலய நிர்வாகங்களால் எதிர்கொள்ளப்படும் தடைகள், சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும், மீன்பிடி சமூகத்தினரின் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் மீன்பிடி வலைகள் மற்றும் பிற உபகரணங்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பான பிரச்சினைகள் பற்றியும், கடந்த சில ஆண்டுகளாக நெல்லைக் கொள்வனவு செய்வது மற்றும் அவற்றுக்கான விலையை நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் நடைமுறைகள் குறித்து குழுவில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மீன்பிடி சமூகத்தினர் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் மீன்பிடி வலைகள் மற்றும் பிற உபகரணங்கள் மீதும் குழு விரிவான கவனம் செலுத்தியது. மேலும், பதப்படுத்தப்பட்ட மீன் உற்பத்திக்கான மூலப்பொருட்களாக கடந்த ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் குறித்து குழுவிடம் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

கடந்த சில ஆண்டுகளில் அரசாங்கங்கள் நெல் கொள்முதல் செயல்முறையை மேற்கொண்ட விதம் மற்றும் அதற்கான விலையை நிர்ணயித்த விதம் தொடர்பான பிரச்சினைகளிலும் இக்குழு கவனம் செலுத்தியது. நாட்டில் உள்ள மொத்த அறுவடையின் அளவு மற்றும் நெல் விதைப்புக்கள் மேற்கொள்ளப்படாத நிலங்களுக்கான காரணங்களை உள்ளடக்கி 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

Leave A Comment