ஜனவரி – நவம்பர் வரை ஏற்றுமதித்துறையில் 5.8 சதவீத வளர்ச்சி பதிவு
- Editor
- January 5, 2026
- பொருளாதாரம்
- பொருளாதாரம்
- 0 Comments
இலங்கையின் ஏற்றுமதித்துறை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருவதாகவும், அதற்கமைய கடந்த ஜனவரி – நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அத்துறை 5.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதாகவும் ஏற்றுமதி அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத் தரவுகள் மற்றும் ஏற்றமதித் தரவுகளின் பிரகாரம் இரத்தினம் மற்றும் ஆபரணங்கள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் சேவைகள் என இக்காலப்பகுதியில் ஏற்றுமதிகள் மூலமான மொத்த வருமானம் 15,776.36 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் வணிகப்பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதிகள் மூலமான வருமானம் 1,364.52 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருப்பதுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை 5.56 சதவீத வளர்ச்சியைக் காண்பித்துள்ளது.
இந்த அடைவு குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஏற்றுமதி அபிவிருத்திச்சபையின் தலைவர் மங்கல விஜேசிங்க, ஜனவரி – நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருப்பது மிகவும் வலுவான வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த அடைவானது செயற்திறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஏற்றுமதி அபிவிருத்தி உத்திகள் மூலம் ஆதரவளிக்கப்பட்ட இலங்கை ஏற்றுமதித்துறையின் மீண்டெழும் தன்மையையும், போட்டித்தன்மையையும் காண்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி வருடாந்த ஏற்றுமதி இலக்கின் 86.3 சதவீதத்தினை நவம்பர் மாத இறுதிக்குள் அடைந்திருப்பது ஏற்றுமதித்துறை சார்ந்தோரின் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் மங்கல விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நவம்பர் மாதத்தில் மாத்திரம் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகள் 5.95 சதவீதத்தினால் அதிகரித்து, 1,053.22 மில்லியன் டொலர் வருமானத்தை நாட்டுக்கு ஈட்டித்தந்துள்ளது. ஜனவரி – நவம்பர் வரையான காலப்பகுதியில் வணிகப்பொருள் ஏற்றுமதி மூலம் திரட்டப்பட்ட மொத்த வருமானம் 12,417.98 மில்லியன் டொலர்களாகும்.

