நாட்டில் புதிதாக பணம் அச்சிடப்படவில்லை; அமைச்சரவை பேச்சாளர்

நாட்டில் புதிதாக பணம் அச்சிடப்படவில்லை என்றும், எந்தவொரு நாட்டிலிருந்தோ அல்லது வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தோ எந்த வகையிலும் கடன்கள் பெறப்படவில்லை என்றும் அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளரும், புத்த சாசனம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

2024.10.28 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு 29-10-2024அன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..

மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் மீள வழங்குவதே மத்திய வங்கியின் வழமையான நடைமுறை எனவும், புதிய திறைசேரி உண்டியல்கள் இந்த முறையிலேயே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறன்றி புதிதாக கடன் ஏதும் பெறப்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அத்துடன் நாட்டில் புதிதாக பணம் அச்சிடப்படவில்லை என்று கூறிய அமைச்சர், அவ்வாறு செய்ய முடியாது என்றும், அவ்வாறு புதிதாக பணம் அச்சிடப்பட்டிருந்தால் புதிதாக அச்சிடப்படும் நாணயத் தாள்களில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கையொப்பம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த வகையில் ஒரு பில்லியன் ரூபாய் நாணயம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave A Comment