பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சுயாதீன மத்திய வங்கி அவசியம்; நாணய நிதியத்தின் செயற்திட்டப்பிரதானி
- Editor
- October 2, 2026
- பொருளாதாரம்
- பொருளாதாரம்
- 0 Comments
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சுயாதீனமாகவும் சிறப்பாகவும் இயங்கக்கூடிய மத்திய வங்கி அவசியமாகும். இதனூடாக தீர்மானம் மேற்கொள்ளலில் தொடர்பற்ற வெளியகத்தரப்பினர் தலையீடு செய்வதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்யமுடியும். இதன் அர்த்தம் மத்திய வங்கி பொறுப்புக்கூறலின்றி செயற்படவேண்டும் என்பதல்ல. மாறாக மத்திய வங்கிக்கான ஆணை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளினாலேயே தயாரிக்கப்படுகின்றது. எனவே தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை உரியவாறு நிறைவேற்றுவதன் ஊடாக மத்திய வங்கி மக்களுக்கும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குமான பொறுப்புக்கூறும் கடப்பாட்டுடன் செயற்படவேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 7 ஆம் கட்ட மீளாய்வு மற்றும் உறுப்புரை 4 தொடர்பான இவ்வாண்டுக்கான கலந்தாய்வு என்பவற்றை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சுமார் 3 வாரங்களுக்கு முன்னதாக நாட்டுக்கு வருகைதந்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து சுமார் 2 வாரங்களாக நாட்டில் தங்கியிருந்து முன்னெடுத்த மீளாய்வை அடுத்து இலங்கையின் நிலைவரம் தொடர்பான தமது மதிப்பீடு குறித்து கடந்த வாரம் கொழும்பிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவான் பபஜோர்ஜியோ தலைமையிலான குழுவினர் தெளிவுபடுத்தினர்.
இவ்வாறானதொரு பின்னணியின் நாட்டின் பொருளாதார நிலைவரம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இவான் பபஜோர்ஜியோவினால் வழங்கப்பட்ட காணொளி வடிவ நேர்காணலொன்று நேற்றைய தினம் (29) இலங்கை மத்திய வங்கியின் தொடர்பாடல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நேர்காணலில் இவான் பபஜோர்ஜியோவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
2022 ஆம் ஆண்டு நாடு முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் பின்னரான மீட்சி என்பவற்றிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ளவேண்டிய பல முக்கியமான பாடங்கள் உள்ளன. அவற்றில் பிரதானமானது அவசர சூழ்நிலைகளை உரியவாறு கையாள்வதற்கு ஏற்றவாறு போதிய கையிருப்பைப் பேணுவது அவசியம் என்பதாகும். சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடான இலங்கை கடந்த காலங்களைப்போன்றே, அண்மையிலும் பொருளாதார ரீதியான அதிர்ச்சிகளுக்கு முகங்கொடுத்தது. எனவே அதனைக் கையாள்வதற்கு கையிருப்புப் பேணுகை இன்றியமையாததாகும்.
அதேபோன்று ஒருங்கிணைந்து செயலாற்றக்கூடிய நாணய மற்றும் நிதிக்கொள்கை என்பன பேணப்படவேண்டும். அதுமாத்திரமன்றி பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது, அது ஏற்கனவே நலிவுற்ற நிலையிலுள்ள சமூகப்பிரிவினரையே வெகுவாகப் பாதிக்கும் என்பதனால், அவர்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவது அவசியம் என்றாலும், சகலரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கட்டியெழுப்புவதே அடிப்படையாகும்.
அதேவேளை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சுயாதீனமாகவும் சிறப்பாகவும் இயங்கக்கூடிய மத்திய வங்கி அவசியமாகும். இதனூடாக தீர்மானம் மேற்கொள்ளலில் தொடர்பற்ற வெளியகத்தரப்பினர் தலையீடு செய்வதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்யமுடியும். இதன் அர்த்தம் மத்திய வங்கி பொறுப்புக்கூறலின்றி செயற்படவேண்டும் என்பதல்ல. மாறாக மத்திய வங்கிக்கான ஆணை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளினாலேயே தயாரிக்கப்படுகின்றது. எனவே தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை உரியவாறு நிறைவேற்றுவதன் ஊடாக மத்திய வங்கி மக்களுக்கும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குமான பொறுப்புக்கூறும் கடப்பாட்டுடன் செயற்படவேண்டும்.
இலங்கையுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் இருக்கும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் எதிர்வரும் 2027 மார்ச் 19 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. அதற்கு முன்பதாக 7 ஆம் மற்றும் 8 ஆம் கட்ட மீளாய்வுகள் முடிவுறுத்தப்படவேண்டியுள்ளன. எனவே தற்போது அடையப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணியவாறு முன்நோக்கிப் பயணிப்பதற்கு உத்தரவாதமளிக்கப்பட்ட மறுசீரமைப்புக்களைத் தொடர்வது அவசியமாகும் என்றார்.

