புத்தாண்டில் சகல தரப்புகளையும் அரவணைத்து கலந்தாலோசனையின் மூலமாக நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டும்

கலாநிதி ஜெகான் பெரேரா
கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை உறுதிகுலையச் செய்துவிடும் என்று சனத்தொகையில் செல்வாக்குமிக்க பிரிவுகள் மத்தியில் நிலவியா அச்சவுணர்வு இல்லாமல் செய்யப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. வலிமை வாய்ந்த ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வின் தலைமைத்துவத்துடன் கூடிய புதிய அரசாங்கம் மார்க்சியப் பாரம்பரியத்தில் தனியார் சொத்துடைமையை மதிக்காமல் இருக்கக்கூடும் என்று விசனம் வெளிப்படுத்தப்பட்டது. அது மெய்யாகவில்லை.
எந்தவிதமான கொந்தளிப்பும் இல்லாமல, ஆட்சிமுறையில் முறிவு ஏற்படாமல் மிகவும் சுமுகமான நிலைமாறலை அரசாங்கம் செய்து கொண்டது. இந்த தொடர்ச்சி பாராட்டப்பட வேண்டியதாகும். பொதுவில், தேர்தல்கள் மூலமான தீர்க்கமான மாற்றத்தை தொடர்ந்து சீரான அரசியல் நிலைமாறல்களை தடங்கல்கள் இல்லாத ஜனநாயக வலுப்படுத்தலின் முன்கூட்டிய குறிகாட்டிகளாக அடையாளப்படுத்த முடியும்.
ஏற்கெனவே இருந்த நிறுவனங்களை முற்றுமுழுவதுமாக அழித்துவிடுவதில் நாட்டம் காட்டாமல் அவற்றை புதிய அரசாங்கம் மதித்துச் செயற்படும்போது ஜனநாயக நியாயப்பாடு ( Democratic legitimacy) வலுப்படுத்தப்படுகிறது. இந்த்விடயத்தில் அரசாங்கத்தின் முதல் வருடம் நேர்மறையானதாக இருந்திருக்கிறது. ஆனால், அரசாங்கம் எதிர்நோக்குகின்ற சவால்கள் பெருவாரியானவை.
கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை அரசாங்கத்தினால் நியமிக்கமுடியாமல் இருக்கின்றமையும் எதிர்க்கட்சிகளினதும் சிவில் சமூகத்தினதும் ஆட்சேபனைகளை கருத்தில் எடுக்காமல் அரசாங்கம் தனது சொந்த தெரிவுக்கு உரியவரையே அந்தப் பதவிக்கு நியமிப்பதில் உறுதியாக நிற்கின்றமையும் ஆழமான பிரச்சினையை பிரதிபலிக்கிறது. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்படுபவர்களை நிராகரிப்பதில் அரசியலமைப்பு பேரவை பக்கச்சார்பான தீர்மானங்களை எடுக்கின்றது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கிறது.
உயர் பதவிகளுக்கான அரசாங்கத்தின் நியமனங்களில் சிலவற்றைத் தவிர, பெரும்பாலானவை ஆளும் கட்சி உறுப்பினர்களையும் அவர்களது சகாக்களையும் கொண்ட குறுகிய வட்டத்திற்குள் இருந்தே செய்யப்படுகிறது. அரசாங்கத்தின் மையக் கட்சியான ஜே.வி.பி. ஐந்து சதவீதத்துக்கும் அதிகமில்லாத பாரம்பரியமான வாக்கு வங்கியையே கொண்டிருந்தது.
உயர்மட்ட அதிகாரிகளின் நியமனங்களை ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுக்கும் அவர்களது சகாக்களுக்கும் மட்டுப்படுத்துவது சிறந்தவர்களை நியமிப்பதற்கான வாய்ப்புக்களை இல்லாமல் செய்து விடுகிறது. தகுதிவாய்ந்த பெருமளவானோரை புறமொதுக்குவது தேசிய நலன்களுக்கு பாதகமானது. சிரேஷ்ட அரசாங்க நியமனங்களுக்காக கட்சிக்குச் சார்பான குறுகிய ஒரு குழுவில் தங்கியிருப்பதில் அரசாங்கத்துக்கு சொந்தக் காரணங்கள் இருக்கலாம் என்ற போதிலும், அது திறமைசாலிகளையும்் நிபுணர்களையும் பரன்படுத்துவதற்கான வாய்ப்புக்களை மட்டுப்படுத்திவிடுகிறது.
தரம் 6 மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் தன்னினச் சேர்க்கையுடன் தொடர்புடைய இணையத்தளத் தொடுப்பு (Weblink to a gay dating site ) உள்ளடக்கப்பட்டதன் விளைவாக தோன்றிய சர்ச்சை ஒரு சதிவேலை போன்று தெரிகிறது. இது தொடர்பில் கல்வியமைச்சராகவும் இருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது அவரது அரசியல் எதிரிகள் அநியாயமான முறையில் குற்றம் சுமத்துகிறார்கள்.
சிவில் சேவையை அரசியல்மயப்படுத்துவதை விடுத்து துறைசார் நிபுணத்துவமுடையதாக்கும் அரசாங்கங்கள் நீண்டகால அடிப்படையில் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் சீர்திருத்தங்களை நிலைபேறானவையாக வைத்திருப்பதில் பெருமளவுக்கு வெற்றி கண்டுவந்திருக்கின்றன.. இலங்கையில் அரச அலுவலர்கள் சேவையில் இருக்கும்போது தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை( தாபனக்கோவை). அவர்கள் சகல மக்களுக்கும் சேவை செய்ய வேண்டியவர்களாக இருப்பதால் எந்தவொரு கட்சியுடனும் தொடர்பைக் கொண்டிருக்கக்கூடாது எனபதையே அது குறித்து நிற்கிறது.
திறமைவாய்ந்த தலைமைத்துவம்
தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெருவாரியான வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்றத் தவறியிருப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் உள்ளாகியிருக்கிறது. இது விடயத்தில், நம்பத் தகாத வாக்குறுதிகளை வழங்கி அந்த தேர்தல்களில் போட்டியிட்ட மற்றைய அரசியல் கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வேறுபாடு கிடையாது. 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரங்களை பொறுத்தவரை நாட்டைப் பல வருடங்களுக்கு பின்னோக்கித் தள்ளி விட்டது என்பதே பிரச்சினையாகும்.
2018 ஆம் ஆண்டில் இருந்த மட்டங்களுக்கு பொருளாதாரம் பின்னடைவைக் கண்டது. அதற்கு தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் காரணம் அல்ல. மிகவும் திறமைவாய்ந்த தலைமைத்துவம் ஒன்றினால் கூட, அந்த இழந்த வருடங்களை இல்லாமல் செய்துவிட முடியாது. கடந்த வருடம் பொருளாதாரம் சுமார் ஐந்து சதவீத வளர்ச்சிக்கு மீட்சிபெற்று வந்தது. ஆனால், அந்த மீட்சி, தேசிய வருமானத்தின் பத்து சதவீதத்தை துடைத் தெறிந்துவிட்டதாக மதிப்பிடப்படும் டித்வா சூறாவளியைத் தொடர்ந்து புதிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது.
சூறாவளியை தொடர்ந்து நாடு வெட்கப்படுவதற்கு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் காரணமாக இருக்கின்றன. நிவாரணம் வழங்கல் மற்றும் மீட்சிக்கான செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு பதிலாக, பல கட்சிகள் மற்றைய தரப்புகள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதிலேயே கவனத்தைச் செலுத்தின. பரஸ்பர நம்பிக்கையுடன் செயற்பட வேண்டியது அவசியானதாக இருக்கும் ஒரு தருணத்தில் அரச இயந்திரம் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மலினப்படுத்தக் கூடியதாக பிரதமர் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களை உதாரணத்துக்கு கூறலாம்.
அரசியல் நோக்கத்துடன் சில கட்சிகள் தாக்குதலை தொடுத்தாலும், அரசாங்கம் ஆட்சிமுறை தொடர்பிலான அணுகுமுறையில் சகல தரப்புகளையும் அரவணைக்கும் போக்கை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. கொள்கை மாற்றத்தை நிலைபேறானதாக பேணுவது என்பது தேர்தல் வெற்றியில் மாத்திரமல்ல, சகலரையும் அரவணைக்கும் செயன்முறைகளிலும் தங்கியிருக்கிறது. பெரும்பான்மைப் பலத்தை பயன்படுத்தி திணிப்பவற்றை விடவும் அரவணைப்பு அணுகுமுறை நீடித்து நிலைக்கக்கூடியதாகும்.
தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. இருதரப்புகளின் ஒத்துழைப்புக் கோட்பாடு ( Bipartisanship) இதையே உணர்த்துகிறது. அதற்கு எதிர்க்கட்சிகளுடனும் சிவில் சமூகத்துடனும கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம்.எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது தனது அணுகுமுறையில் நியாயபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் நடந்துகொள்கிறார்.
இருதரப்புகளின் ஒத்துழைப்பின் பரந்தளவிலான ஒரு பார்வை பிரதான எதிரணிக் கட்சிகளுக்கு அப்பால் இன, மதச் சிறுபான்மைச் சமூகங்களைமும் உள்ளடக்குவதாக இருப்பது அவசியம். பாகுபாடு காட்டாமல் சகல குடிமக்களையும் சமத்துவமாக நடத்துவது என்ற அரசாங்கத்தின் உறுதிப்பாடு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிப்படையான இனவாதம் குறைந்திருக்கிறது. கடந்தகால நிலைவரத்தை விடவும் தற்போது பெருமளவுக்கு பௌதீகப் பாதுகாப்புடன் தாங்கள் வாழ்வதாக எிறுபான்மைச் சமூகங்கள் உணருகின்றன. இந்த பயன்விளைவுகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆனால், இனங்களுக்கு இடையிலான இணக்கத்துக்கு ஆழமான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நீடிக்கவே செய்கிறது.
தேசிய நல்லிணக்கத்தை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு அரசாங்கம் மேலும் கூடுதலான பணிகளைச் செய்யவேண்டியிருக்கிறது. நல்லிணக்கம் என்பது அடையாளபூர்வமானதாக இல்லாமல் களத்தில் ஏற்படும் மாற்றத்தில் வேர்விட்டதாக இருக்க வேண்டும். இந்த பணிக்கு அரசியல் அதிகாரப்பகிர்வு மிகவும் முக்கியமானதாகும். சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் தேசிய அபிவிருத்தியில் இருந்து தாங்கள் தொடர்ந்தும்் புறமொதுக்கப்படுவதாக உணருகிறார்கள்.
தேசிய தலைவர்களின் விஜயங்களையும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும் அவர்கள் வரவேற்கின்ற அதேவேளை, அபிவிருத்தி தொடர்பிலான வாக்குறுதிகள் அடிக்கல் நாட்டுதலுடனும் வைபவங்களுடனும் மட்டுப்படுத்தப்படுபவையாக இருப்பது குறித்து ஏமாற்றமும் விரக்தியும் அடைகிறார்கள். பௌத்த மக்கள் வாழாத பகுதிகளில் பௌத்த ஆலயங்களை நிர்மாணிப்பது நல்லிணக்கமாக அன்றி அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
பரந்த அரசியல் சமுதாயம்
பதின்மூனாறாவது திருத்தத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு ரீதியான அதிகாரப்பரவலாக்க கட்டமைப்பு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சிறுபான்மைச் சமூகங்களின் மனக்குறைகளை கையாளுவதற்கான மிகவும் நடைமுறைச் சாத்தியமான பொறிமுறைய்கும். இது உடன்பாட்டின் மூன்றாவது ஒரு தரப்பாக இந்தியாவின் உதவியுடன் கொண்டு வரப்பட்டது. நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுவரும் மாகாணசபை தேர்தல்களை மேலும் காலந்தாழ்த்தாமல் நடத்த வேண்டியது அவசியமானதாகும்.
ஏழு வருடங்களுக்கும் அதிகமான காலமாக மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இந்த நீண்ட இடைநிறுத்தம் ஜனநாயக நடைமுறையையும் சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையையும் மலினப்படுத்துகிறது. இந்தியாவிலோ அல்லது சுவிட்சர்லாந்திலோ எம்மால் காணக்கூடியதாக இருக்கும் சர்வதேச அனுபவம் பிராந்திய நிறுவனங்கள் தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்படும்போது மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவையாகவும் பெருமளவுக்கு பயனுறுதியுடையவையாகவும் இருக்கும் என்பதை காட்டுகிறது.
கருத்தியல் அடிப்படையில் சகலரையும் சமத்துவமான குடிமக்களாகாநடத்துவது என்பது போதுமானதல்ல. ஜனநாயக சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு சமூகங்களை அவற்றின் நியாயபூர்வமான நலன்களுடன் கூட்டுப் பாத்திரங்களாக அங்கீகரிப்பது அவசியம். அதிகாரப்பகிர்வு குறிப்பிட்ட சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தீர்மானங்களை எடுப்பதற்கு அவர்களை அனுமதிக்கிறது என்பதுடன் அன்னியப்படுத்தலை குறைத்து தேசிய ஒருங்கிணைப்பை பலப்படுத்துகிறது
அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் முதலாவது வருடத்தில் இந்த பிரச்சினைகளில் பலவற்றை ஏற்றுக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அவ்வாறு ஏற்றுக் கொண்டதை இன்னமும் அரசாங்கம் நடைமுறையில் செயற்படுத்தவில்லை. ஆட்கள் காணாமல் போனமை, நீண்டகாலமாக ஆட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பது, நில ஆக்கிரமிப்பு மற்றும் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பது ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகள் தீய்க்கப்படாமல் இருக்கின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது சீர்திருத்தங்களைச் செய்வதற்கு முயற்சிக்கப்பட்ட விடயங்களில் கூட பதிலீடாக கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்ட சட்டமூலம் சர்வதேச யனித உரிமைகள் தராதரங்களுக்கு குறைவானதாகவே இருக்கிறது.
இந்த அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கமான முறையில் கையாளப்படுகின்ற காலப்பகுதியாக புதிய வருடம் அமைய வேண்டும். அவ்வாறு இல்லையேல் பிரச்சினைகள் மேலும் புரையோடி மோசமடைவதுடன் அபிவிருத்திச் செயன்முறையில் முழுமையாக ஈடுபடுவதில் இருந்து அரசாங்கத்தின் கவனம் திசைதிரும்பவும் வழிவகுத்துவிடும். பதின்மூன்றாவது திருத்தத்தின் ஊடான அதிகாரப்பரவலாக்கமும் நம்பகத்தன்மை கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைகளும் பேச்சளவில் இல்லாமல் நடைமுறைப்படுத்தலை நோக்கி நகர வேண்டும்.
மாகாணசபை தேர்தல்களை எத்தகைய தேர்தல் முறையின் கீழ் நடத்துவது என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணை ஒன்று இவ்வாரம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்றே தற்போது நடைமுறையில் உள்ள காணாமல் போனோர் விவகார அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் போன்றவையும் பயனுறுதியுடைய முறையில் செயற்படக்கூடியதாக வலுவூட்படப்பட வேண்டும் என்கிற அதேவேளை, மக்களின் நம்பிக்கையைப் பெற்க்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்கச் செயன்முறை ஒன்றும் நிறுவப்பட வேண்டும்.
நிறுவனங்களில் நம்பிக்கை வைப்பதற்கு அரசியலமைப்புச் செயன்முறைகளின் மீது மதிப்புவைக்க வேண்டியது அவசியம். சமூகத்தில் நம்பிக்கை வைப்பதற்கு சகல தரப்புகளையும் அரவணைத்து தீர்மானங்களை எடுக்கும் அணுகுமுறை அவசியம். சமூகங்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுவதற்கு மெய்யான அதிகாரப் பகிர்வும் பொறுப்புக் கூறலும் அவசியம். பொருளாதார மீட்சி, அனர்த்தப் பாதிப்புக்களில் இருந்து மீளவதற்கான புனர்நிரமாணம், நிறுவன ரீதியான நேர்மை மற்றும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஆகியவை தனித்தனியான பணிகள் அல்ல. அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த ஜனநாயக ஆட்சிமுறையின் செயற்பாடுகளாகும்.
அரசாங்கம் அதன் மைய ஆதரவாளர்கள் தளத்தில் நம்பிக்கைவைத்துச் செயற்படுவதற்கு அப்பால் நகர்ந்து பரந்தளவிலான அரசியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சேர்த்துக் கொள்ளக்கூடிய முறையில் ஆட்சி செய்ய வேண்டும். அரசாங்கத்தின் வெற்றி அதன் சீர்திருத்தங்களின் நீடித்த நிலைப்பில் மாத்திரமல்ல, நாட்டின் நீண்டகால அடிப்படையிலான உறுதிப்பாட்டுக்கும் ஐக்கியத்துக்குமான வாய்ப்புக்களிலும் தங்கியிருக்கிறது.

