உள்நாட்டு பொருளாதாரத்தினை உடன் வலுப்படுத்தாதுவிட்டால் மீண்டும் நெருக்கடி – கலாநிதி அகிலன் கதிர்காமர்
- Editor
- May 14, 2026
- கருத்துக்கள், தமிழ் Header
- கருத்துக்கள்
- 0 Comments
கலாநிதி அகிலன் கதிர்காமர் செவ்வி
நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பன்முகப்படுத்தி உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனைச் செய்யத் தவறினால், சர்வதேச நெருக்கடிகளின் போது இலங்கை மீண்டும் பொருளாதாரச் சரிவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பொருளியல் ஆய்வாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி: தற்போதைய ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்? இது உலக நாடுகளுக்கு எத்தகைய செய்தியைச் சொல்கிறது?
பதில்: தற்போதைய சூழல் என்பது அனைத்து நாடுகளுக்கும் ஒரு பெரும் எதிர்பார்ப்பையும் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய காலப்பகுதியாகும். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் உலக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இது திடீரென உருவான மோதல் அல்ல. கடந்த காலங்களில் அமெரிக்கா தான் ஈராக்கைத் தூண்டிவிட்டு ஈரானுக்கு எதிரான போரைத் தொடக்கியது. இந்தப் போர் நீண்டகாலம் நீடிக்கும் போது, ஈரானிய மக்கள் உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பாரிய நெருக்கடிகளைச் சந்தித்தனர். போர் நெருக்கடிகளுக்குள் வாழ்ந்த மக்களுக்கு ‘வரிசை யுகம்’ என்றால் என்னவென்று தெரியும். எனவே, இது ஒரு நீண்டகால அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே ஆகும்.
கேள்வி: உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் குறித்துப் பேசப்படுகிறது. இது எந்த அளவுக்கு உயர வாய்ப்புள்ளது?
பதில்: போர்ச் சூழல் தீவிரமடையும் போது, எண்ணெய் விநியோகப் பாதைகள் பாதிக்கப்படும். இதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 120 முதல் 150 டொலர்கள் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இவ்வாறு எண்ணெய் விலை உயரும் போது, இலங்கையைப் போன்ற இறக்குமதிப் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுக்கு அது மிகப்பெரிய சுமையாகும். எண்ணெய் விலை இரண்டு மடங்காக அதிகரித்தால், எமது நாட்டின் இறக்குமதிச் செலவும் பாரிய அளவில் உயரும். இது ஏற்கனவே பலவீனமாக உள்ள நமது அந்நியச் செலாவணி கையிருப்பில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும்.
கேள்வி: இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் இந்தப் போர் எந்தெந்தத் துறைகளில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும்?
பதில்: பிரதானமாக சுற்றுலாத்துறை மற்றும் இறக்குமதிச் செலவுகள் ஆகிய இரண்டிலும் கடும் பாதிப்புகள் ஏற்படும். போர்ச் சூழல் காரணமாக சர்வதேசப் பயணங்கள் குறையும் போது, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறையும். இதனால் நாட்டுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் வீழ்ச்சியடையும். மறுபுறம், எரிபொருள் விலை உயர்வால் மின்சாரம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, அது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும்.
கேள்வி: இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு இறக்குமதிகள் குறித்து நீங்கள் முன்வைக்கும் விமர்சனம் என்ன?
பதில்: நாம் கடந்த 2010 முதல் 2020 வரையிலான காலப்பகுதியில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடல் உணவுகளை இறக்குமதி செய்துள்ளோம். ஒரு தீவு நாடாக இருந்துகொண்டு கடல் உணவுகளை இவ்வளவு பெருந்தொகை கொடுத்து இறக்குமதி செய்வது நமது பொருளாதாரக் கொள்கையின் பலவீனத்தைக் காட்டுகிறது. எங்கு முற்போக்கான அரசியல் வளர்கிறதோ, அங்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ. போன்ற அமைப்புகள் இராணுவச்சதி அல்லது தலைவர்களைக் கொலை செய்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிகிறது. இது வளரும் நாடுகளின் தற்சார்பு பொருளாதாரத்தை முடக்குமொரு உலகளாவிய உத்தியாகும்.
கேள்வி: மத்திய கிழக்கில் இஸ்ரேலின் உருவாக்கம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் பற்றி உங்கள் பார்வை என்ன?
பதில்: இஸ்ரேலை உருவாக்கியதே அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தான். மத்திய கிழக்கில் தமது ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கும், அந்தப்பிராந்தியத்தின் இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் இஸ்ரேலை அவர்கள் கருவியாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் தான் அங்கு ஏற்படும் எந்தவொரு சிறு சலனமும் உலகளாவிய ரீதியில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
கேள்வி: அமெரிக்காவின் நட்பு நாடுகள் கூட இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றி வருவதாகக் கூறப்படுகிறதே?
பதில்: ஆம், அது உண்மை. இப்போது கனடா போன்ற நாடுகள் கூட தமது வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்து வருகின்றன. இனிமேல் அமெரிக்காவில் மட்டும் முழுமையாகத் தங்கியிருக்க முடியாது என்பதை அந்த நாடுகள் உணரத் தொடங்கியுள்ளன. தங்களைப் போன்ற நாடுகளுடன் புதிய உறவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று அவை சிந்திப்பது உலக அரசியலில் ஏற்பட்டுள்ள ஒரு ஆரோக்கியமான மாற்றமாகும்.
கேள்வி: இந்த உலகளாவிய நெருக்கடியில் இருந்து மீள இலங்கை எத்தகைய இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்?
பதில்: இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். வெறுமனே சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளை மட்டும் மையப்படுத்திச் சிந்திப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. எம்மைப் போன்ற அபிவிருத்தி அடையாத ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைப் பேண வேண்டும். அவர்களுடன் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, ஒரு புதிய உலகக் கட்டமைப்பை நோக்கி நாம் நகர வேண்டும்.
கேள்வி: உள்நாட்டு ரீதியாக நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?
பதில்: நாம் எமது நாட்டுக்குள்ளும் வித்தியாசமான கொள்கைகளையும், வலுவான பொருளாதாரக் கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும். இறக்குமதியைக் குறைத்து உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலமே இத்தகைய சர்வதேசப் போர்ச் சூழல்களில் இருந்து எமது பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியும். எமது வளங்களைச் சரியாகப் பயன்படுத்தி தற்சார்பு நிலையை அடைய முற்பட வேண்டும்.
சர்வதேச அரசியல் என்பது வெறும் இராணுவ பலத்தை மட்டும் சார்ந்தது அல்ல, அதுவொரு நாட்டின் பொருளாதார நரம்புகளைத் தீர்மானிக்கும் சக்தியாகும். ஈரான்-அமெரிக்க மோதல் என்பது இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும்.
நாம் எமது வெளியுறவுக் கொள்கையை பன்முகப்படுத்தவும், உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனைச் செய்யத் தவறினால், சர்வதேச நெருக்கடிகளின் போது இலங்கை மீண்டும் பொருளாதாரச் சரிவுகளைச் சந்திக்க நேரிடும்.

