பெறுமதிசேர்வரிஅறவீடுஜுலைமுதல்இலத்திரனியல்மயம்;உள்நாட்டுஇறைவரித்திணைக்களம்அறிவிப்பு

பெறுமதிசேர் வரி அறவீடு தொடர்பான சகல விபரங்களும் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இலத்திரனியல் முறைமையின் ஊடாகவே பதிவுசெய்யப்படவேண்டும் என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

 
அத்தோடு உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் அனுமதியளிக்கப்பட்ட விதிவிலக்கான சந்தர்ப்பங்களின்கீழ் மாத்திரமே பெறுமதிசேர் வரி அறவீடு தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் பதிவுசெய்யமுடியும் எனவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 
அதேபோன்று பெறுமதிசேர் வரி திருத்தச்சட்டத்துக்கு அமைவாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவ பால் மற்றும் யோகட் என்பவற்றுக்கு பெறுமதிசேர் வரி அறவிடப்படமாட்டாது என அறிவித்துள்ள உள்நாட்டு இறைவரித்திணைக்களம், மின்னுற்பத்திக்காக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சாரசபைக்கு விநியோகிக்கப்படும் ‘நப்தா’ எனப்படும் திரவ மூலப்பொருளுக்கான பெறுமதிசேர் வரி அறவீடும் நீக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

 
அதேவேளை பெறுமதிசேர் வரித்திருத்தச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் வதிவற்ற கட்டமைப்புக்களால் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு இலத்திரனியல் முறைமை ஊடாக வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கும் பெறுமதிசேர் வரி அறவிடப்படவுள்ளது.

 
மேலும் வர்த்தக நோக்கம் சார்ந்த பொருள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபடும் சகல தனிநபர்கள் மற்றும் கட்டமைப்புக்களும் புதுப்பிக்கப்பட்ட பெறுமதிசேர் வரி செயற்திட்டத்தின்கீழ் பதிவுசெய்யவேண்டும் என உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Leave A Comment