பொருளாதாரஇறையாண்மையைவென்றெடுக்கும்போராட்டத்தினைதீவிரப்படுத்தவேண்டும்;கம்யூனிஸ்ட்கட்சி

ஆசியப் பொருளாதாரம், 500 ஆண்டுகளுக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தின் முன்னோடியாக உருவெடுத்துள்ளது. இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக் கொண்டு, இலங்கை  எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, பொருளாதார இறையாண்மையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும். அதற்காக பிரிக்ஸ்  அமைப்புடன் ஒத்துழைப்புப் பாதையில் இணையுமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வற்புறுத்துகிறோமென சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

மே தினத்தினை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே அக்கட்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், 

இந்தமுறை மே தினம், முழு உலகமும் ஆழமான பொருளாதார வீழ்ச்சிக்குள் தள்ளப்பட்டுள்ள ஒரு சந்தர்ப்பத்தில் கொண்டாடப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியும் அரசாங்கமும், பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய அரசியல், சமூக மற்றும் கலாசாரப் பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ள பின்னணியிலேயே இம்முறை மே தினம் உதயமாகியுள்ளது.

1890 ஆம் ஆண்டு முதல் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாட உலகத் தொழிலாளர் வர்க்கம் தீர்மானித்த அன்றிலிருந்து மே 01 ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக மாறியதுடன், சிவப்புக் கொடிகளை ஏந்தி தொழிலாள வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்தும் தினமாகவும் மாறியது.

அன்று முதல் இன்று வரை, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் மனித விடுதலைக்காகவும் போராடி, போர்க்களத்தில் வீழ்ந்த, உயிர்நீத்த மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலட்சக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது கௌரவத்தை உரித்தாக்குகின்றது.

1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை நாம் சுமார் 50 வருடங்களாக நடைமுறைப்படுத்தினோம். இதனால் கட்டியெழுப்பப்பட்டு வந்த எமது உற்பத்திப் பொருளாதாரம் அழிக்கப்பட்டது. நாம் ஏகாதிபத்திய நாடுகளின் உற்பத்திகளுக்கான ஒரு சந்தையாக மாறினோம். இறுதியில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அது வெடித்தது. இதன் காரணமாக நாட்டின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்தது. அரச வருமானம் சரிந்தது. பாரிய கடன் சுமை குவிந்தது.

இதற்கு மேலதிகமாக ஊழல், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பரவி, அரச சேவை முற்றாக அரசியல்மயப்படுத்தப்பட்டது. 1972 ஆம் ஆண்டு நாம் குடியரசாக மாறி அரசியல் சுதந்திரத்தை முழுமைப்படுத்திய போதிலும், இன்று நமக்கு உண்மையான அரசியல் சுதந்திரம் அற்றுப்போயுள்ளது.

2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் மூலமான நெருக்கடிக்கு தீர்வு, எட்டிய தூரத்தில் கூட தென்படவில்லை. எவ்வாறாயினும், மீளாய்வு செய்யப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை, எவ்வித மாற்றமுமின்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்பொழுது நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதற்கிடையில், 500 ஆண்டுகளுக்குகப் பிறகு ஆசியப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரத்தின் முன்னோடியாக உருவெடுத்துள்ளமையானது, புதிய சுதந்திர நாடுகளின் மக்களுக்கு ஒரு பலமாகவும் உத்வேகமாகவும் அமைந்துள்ளது. உதித்துள்ள இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, இலங்கை மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடியிலிருந்து மீண்டு, பொருளாதார இறையாண்மையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த நாம் உறுதிபூணுவோம். நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழி, உலகளாவிய தெற்குடன்  இணைந்த பொருளாதாரப் பாதையிலேயே உள்ளது என்பதை வலியுறுத்தும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, பிரிக்ஸ் அமைப்புடன் ஒத்துழைப்புப் பாதையில் இணையுமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வற்புறுத்துகிறது.

அதேநேரம் வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வாழ்வதற்குப் போதுமான ஊதியத்தை வழங்குமாறும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது..

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை ஒழித்து,, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையில், பல்வேறு மட்டங்களிலான ஜனநாயக அதிகார அலகுகளில் மக்கள் இறைமையை நடைமுறை ரீதியாக உறுதிப்படுத்த வேண்டும். 

 ஏனையோரின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமது மொழியைப் பாதுகாக்கவும் தமது மதங்களைப் பின்பற்றவும் நாட்டின் அனைத்து சமூகங்களுக்கும் உரிமை கிடைக்கக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குமாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வற்புறுத்துகிறது.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் ஏனைய தரப்பினர் தலையிடுவதற்கு வழிவகுக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு, சுமார் எட்டு தசாப்த காலமாக நாடு பின்பற்றி வந்த அணிசேரா வெளியுறவுக் கொள்கையை ஒழிக்கும் வகையில் கையெழுத்திடப்பட்ட இராணுவ ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

Leave A Comment