மன்னாரில் கடற்றொழில் பீடம்

கலாநிதி. சூசை ஆனந்தன்

மன்னார் மாவட்டத்தில் கடற்றொழில் பீடம் ஒன்று வவுனியா பல்கலைக் கழகத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மன்னாரில் திறந்த பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்று இயங்கி வருகின்ற போதிலும் யாழ்.மற்றும் வவுனியா பல்கலைக்கழத்தின் கீழ் யாதாயினும் ஓர் பீடம் மன்னார் மாவட்டத்தில் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பது துயரமான ஓர் செய்தியாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு  ஐம்பது வருடங்கள் பூர்த்தி செய்து வருகின்ற நிலையில் பல கற்கைப் பீடங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும்  மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு கற்கைப் பீடமாவது  ஆரம்பிப்பது சாத்தியமாகவில்லை.

கடற்றொழில் பீடமொன்று மன்னாரில் அல்லது முல்லைத் தீவில் அமைவதற்கான முயற்சிகள் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் கீழ்  மறைந்த முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஏ.துரைராஜா அவர்கள் காலத்தில் இருதசாப்தங்களின் முன் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஆயினும் இதுவரை அது கைகூடவில்லை.அவரின் மறைவோடு திட்டமும் மறைந்து போனது. இப்போது வவுனியா பல்கலைக்கழகம் மன்னாரில் இப்பீடத்தினை ஆரம்பிப்பதற்கான துரிதநடவடிக்கை எடுத்துவருவதை அறியக்கூடியதாகவுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

பீடம் அமையுமாயின் மன்னார் மாவட்டத்திற்கு மட்டுமல்ல வடபகுதி முழுவதற்கும் பெரு வரப்பிரசாதமாக அமையும். இத்துறை சார்ந்த கற்கைகள் இத்துறைசார்ந்த அபிருத்திக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் உந்து சக்தியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

வடக்கு கடல் வளம்

தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடபுலத்தில் பரம்பியுள்ள இயற்கை வளங்களுள்  கடலக வளமும் ஒன்று.வடக்கின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி,முல்லைத்தீவு,(வவுனியா நன்னீர் வளம்)ஆகிய பிரதேசங்களில்  இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின்(2,20,000) முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றாக கடல் வளத்துறை விளங்கி வருகின்றது.ஆயினும் செழிப்பு மிக்க இவ்வளங்களை இப்பகுதி மக்கள்  முழுமையாகப் பயன்படுத்த முடியாது பல்வேறு நெருக்கடிகள்,சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நெருக்கடிகளும் சவால்களும்

1.தென்பகுதி மற்றும் இந்திய மீனவர்களின் முடிவற்ற ஆக்கிரமிப்பும் வளச்சுண்டலும்.

2.உள்ளூர் மீனவர்களின் முறையற்ற மீன்பிடிச் செயற்பாடுகள் (டைனமைட் வெடிவைத்தல், குழைவைத்து மீன்பிடித்தல்,இழுவை மடி பயன்படுத்தல், தங்கூசி வலை,சுருக்குமடி,அகலச் சிறகுவலை,ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல்   உட்பட பல)

3.இராணுவ கெடுபிடிகள்.

4. இடம் பெயர்ந்த மீனவர்கள் மீளக் குடியமர முடியாத நிலை.   (வலிவடக்கு,கொக்கிளாய்,நாயாறு,முள்ளிக்குளம்)

5.ஆழ்கடல் மீன்பிடிக்கான வசதிகள் இன்மை.

6.கடல் அட்டை வளர்ப்பு நெருக்கடிகள் .

7.துறைசார் ஆளணிப் பற்றாக்குறை

போன்றவை இத்துறை  எதிர் நோக்குகின்ற பிரதான நெருக்கடிகள் உள்ளன.

வள வாய்ப்புக்கள்

வடபகுதியானது நாட்டின் ஏனைய கடற் பிராந்தியங்களில் ஒப்பிடுகையில் ஒப்பீட்டு ரீதியிலால் மிகச்சிறப்பான சமுத்திரத் சூழலையும் செழிப்பான மீன் வளங்களையும்  கொண்டுள்ளது.

பெளதிக வளம்

1.கிழக்கே வங்காள விரிகுடா சார்ந்த பகுதி  பேதுரு மீன்பிடித் தளம் தூரக்கரை,ஆழ்கடல் , மீன்பிடிக்கான வாய்ப்பினைப் கொண்டுள்ளது.

2. வடக்கு வடமேற்கே  -பாக்கு நீரிணை,பாக்கு குடாக் கடல் கரையோர மற்றும் ஏரிகள் களப்புக்கள்,தீவுகள் போன்றவை  நீரில் வளர்ப்புக்கான (Aquaculture)  வாய்ப்பினை கொண்டதாக விளங்குகின்றது.

3.மேற்கில் மன்னார் குடா, ஆதாம்பாலம், பவளப்பாறைத் தொடர்கள்  (வங்காலை,அரிப்பு ,மோதரகம திட்டுக்கள்), கண்டல் காடுகள் போன்றவை இவற்றுள் குறிப்பிடத் தக்கவை.இப்பகுதி கரைவலை மற்றும் சங்கு மற்றும் கடல்  அட்டை குளிப்பதற்கான  வாய்ப்பினைக் கொண்டவை.

4.மேலும் வன்னிப் பகுதியானது கட்டுக்கரை,இரணைமடு, போன்ற பாரிய குளங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நன்னீர் நிலைகளைக் ககொண்டதாவும் அவை நன்னீர் மீன்பிடிக்கான சூழலை மிக வாய்ப்பாக கொண்டதாகவும் விளங்குகின்றது.

 உயிரியல் வளம்

வடபகுதியானது உயிரியல் பல்வகைத் தன்மை கொண்டது.நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுக்கின்ற ஏற்றுமதிப் பொருட்களான இறால்,நண்டு,கணவாய்,சங்கு,கடலட்டை போன்ற பெறுமதிமிக்க கடலுணவுகளை உற்பத்தி செய்கின்ற ஓர் பகுதியாக விளங்குகின்றது.

இவைதவிர ஏரிப்பகுதிக்குரிய ஒட்டி, ஓரா, முதல், திரளி, பாரை, சாலை, சூடை, கும்பளா ,திருக்கை,சுறா போன்ற சிறிய ரக மீன்களை உற்பத்தி செய்கின்ற பகுதியாகவும் உள்ளது.

சவால்கள்

இத்துறை சார்ந்த மூன்றாம்நிலைக் கல்வி நிறுவனங்கள் ஆய்வு நிறுவனங்கள் எவையும் இல்லை.யாழில் அமைந்துள்ள சமுத்திரப் பல்கலைக்கழகம்– கப்பலோட்டம்,மாலுமி சாஸ்திரம் (Navigation & seamanship)  மற்றும் மீன்பிடி உபகரணங்கள் (fishing gears with engine course) தொடர்பான பயிற்சியினை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கி வருகின்றன.யாழ்ப்பாண பல்கலைக்  கழகத்தில் முன்பு மேற்கொள்ளப்பட்ட கடற்றொழில் டிப்ளோமா கற்கைநெறி சில வருடங்களிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. விஞ்ஞான பீடத்தில் மீன்பிடித்துறை  ஒன்று இயங்கியபோதிலும் சில  சிங்களமாணவர்களே அதில் பயின்று வருகின்றனர்.

நாரா,(NARA) மீபா (MEPA) போன்ற நிறுவனக் கிளை ஒன்று அண்மையிலேயே திறக்கப்பட்டது அதன் பணி பூச்சிய நிலையிலேயே உள்ளது.

நக்டா (NAQDA) நிறுவனம் கடலட்டை வளர்ப்பு தொடர்பான அபிவிருத்தி வேலைகளை மட்டுப்படுத்தப்பட்ட சேவையினை வழங்கி வருகிறது.

ஒட்டு மொத்தத்தில் இத்துறைசார்ந்த ஆளணி வளம் மிகக்குறைவாக உள்ளன. மீபா,கரையோர வளபாதுகாப்புத் திணைக்களம், சூழல் அபிவிருத்தி அதிகாரசபை ,வனவளத்திணைக்களம் ஆகியவற்றின் பணிகள் இத்துறை சார்ந்து திருப்திகரமாக செயற்பட்டு வருகின்றன எனச் சொல்வதற்கில்லை.

வளமுகாமைத்துவம்,கண்காணிப்பு நடவடிக்கைகள் மிக மந்தமாகவே உள்ளன. இராணுவ தலையீடுகள் கெடுபிடிகள் குறையவில்லை. போதைவஸ்து கடத்தல்கள்  கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு விரிவடைந்துள்ளது.

இட அமைவுப் பொருத்தப்பாடு

மன்னாரில் வடகரையோரத்தில் உள்ள பாப்பா மோட்டைப் பகுதி இப்பீடத்திற்கான அமைவிடமாக தெரிவு செய்யப்பட உள்ளதாக அறிய முடிகின்றது. இது மிகப் பொருத்தமான அமைவிடமாகும். காரணம் இப்பகுதி சார்ந்துள்ள ஏரிப்பகுதிகள் நீரில் வளர்ப்பிற்கான குறிப்பாக இறால் வளர்ப்பு ,அட்டை வளர்ப்பு ஆய்வுக்கான சமுத்திரத் சூழலைக் கொண்ட ஓர் பகுதியாகவுள்ளது. அண்மித்துள்ள விடத்தல் தீவு இறங்கு துறை சமுத்திரவியல் (Oceanography) ஆய்வு கப்பலோட்டம் ,மாலுமி சாஸ்திரம் (Navigation & seamanship) பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பாகவுள்ளது.மற்றும் நன்னீர் மீன்பிடி ஆய்வுகளுக்கு கட்டுக்கரை குளமும் அதன் கீழ் உள்ள பல சிறிய குளங்களும் உதவும். சமுத்திர நீரோட்டம்,நீரின் இயல்புகள்  ,பவளப்பாறைகள் முத்துச் சிப்பி  வளர்ப்பு ஆய்வுக்கு மன்னார் குடாக்கடல் (Gulf of Mannar) பகுதியான வங்காலை,அரிப்பு போன்ற இடங்கள் பொருத்தமாக அமைந்துள்ளன. மேலும் இட அமைவுப்பகுதி போதியளவு இடவசதி கொண்டதாக இருப்பதுவும்  இட அமைவுக்கு வாய்ப்பாக உள்ளதாக கருதலாம்.மன்னார் நகரமும் கோட்டைப்பகுதியும் மிக கிட்டிய தூரத்தில் அமைந்துள்ளமையும் சிறந்த போக்குவரத்து வசதிகளையும் கொண்டதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டு மொத்தத்தில் கடற்றொழில் பீடம் அமைவதற்கான பெளதிக மற்றும் பண்பாட்டுச் சூழலை வாய்ப்பாக கொண்ட பகுதியாக மன்னார் மாவட்டம் உள்ளதால் இம்முயற்சி வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி நிற்கின்றோம். கனவு நனவாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave A Comment