முன்மொழிவுகளை  கருத்திற்கொள்ளுங்கள்; சர்வதேச மன்னிப்புச்சபை

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்திற்கொள்ளுமாறும், புதிய வரைவு இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு ஏற்றவாறு அமைவதை உறுதிப்படுத்துமாறும் சர்வதேச மன்னிப்புச்சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் காலப்பகுதி கடந்த சனிககிழமையுடன் (28) நிறைவடைந்துள்ளது. அதன்படி இவ்வரைவு தொடர்பான நிலைப்பாடு மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கி சர்வதேச மன்னிப்புச்சபையினால் கடந்த 27 ஆம் திகதி நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

‘பயங்கரவாதம்’ எனும் பதத்துக்கு சர்வதேச பிரகடனங்களிலோ அல்லது பொதுவான சர்வதேச சட்டங்களிலோ நிலையானதும், குறிப்பானதுமான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. ஆகையினால் சில அரசாங்கங்கள் அரசியல் ரீதியிலான விமர்சனங்களையும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஏனைய மனித உரிமைகளையும் சட்ட ரீதியாக ஒடுக்கும் நோக்கில் ‘பயங்கரவாதம்’ பதத்துக்குப் பரந்துபட்ட வரைவிலக்கணத்தை வழங்குவதை எமது ஆய்வு முடிவுகள் காண்பிக்கின்றன. அதன்படி இலங்கையில் பல்வேறு மீளாய்வுகளின் பின்னரும் ஒவ்வொரு அரசாங்கத்தினாலும் முன்மொழியப்படும் வரைவுகளிலும் பயங்கரவாதம் எனும் பதத்துக்குப் பரந்துபட்ட வரைவிலக்கணத்தை வழங்கும் போக்கே பின்பற்றப்பட்டுவருகிறது. அது இச்சட்டம் ஏதேச்சதிகாரப்போக்கிலும், மீறல்களுக்கு வழிகோலும் வகையிலும் பிரயோகிக்கப்படக்கூடிய அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கின்றது.

அடுத்ததாக தேடுதல்களை மேற்கொள்ளல், கைதுசெய்தல், சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளல், ஏதேனுமொரு கட்டடத்துக்குள் பிரவேசித்தல், சொத்துக்களைக் கையகப்படுத்தல் என்பன உள்ளடங்கலாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரங்கள் இப்புதிய வரைவின் ஊடாக படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதற்கு படையினருக்குப் பயிற்றுவிக்கப்படாத நிலையில், இப்பணிகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் பொலிஸார் உள்ளிட்ட சிவில் பாதுகாப்புத்தரப்புக்கு மாத்திரமே வழங்கப்படவேண்டும்.

அதேபோன்று சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்படும் ஒருவரை 2 மாதங்கள் தொடக்கம் ஒரு வருடம் வரை தடுத்துவைப்பதற்கான வாய்ப்புக் காணப்படல் மற்றும் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருத்தல் என்பனவும் இப்புதிய வரைவில் உள்வாங்கப்பட்டிருக்கும் முக்கிய கரிசனைக்குரிய விடயங்களாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் பொதுமக்களின் கருத்தறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை வரவேற்கும் அதேவேளை, இவ்வரைவு குறித்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்திற்கொள்ளுமாறும், புதிய வரைவு இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு ஏற்றவாறு அமைவதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்துகின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Comment