10 நாட்களில் இரண்டாவது முறையாக பெற்றோல் விலை உயர்வு

இலங்கையில் தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களான லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகியன ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையை மீண்டும் லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளன. இந்த புதிய விலை திருத்தமானது நேற்றுமுன்தினம் 04-11-2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இவ்விரு நிறுவனங்களும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலையை 495 ரூபாவிலிருந்து 515 ரூபாவாக உயர்த்தியுள்ளன. குறித்த இரு நிறுவனங்களும் கடந்த 10 நாட்களுக்குள் மேற்கொண்ட இரண்டாவது விலை அதிகரிப்பு இதுவாகும். கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் முதலில் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றலொன்றின் விலையை 475 ரூபாவிலிருந்து 495 ரூபாவாக உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் அதே விலை ஏற்றத்தை அமுல்படுத்துவதாக அறிவித்தது.

தற்போது மீண்டும் 20 ரூபா விலை உயர்த்தப்பட்டதன் மூலம், கடந்த 10 நாட்களுக்குள் மாத்திரம் ஒக்டேன் 95 ரக பெற்றோர் விலை லீற்றருக்கு 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அரசாங்கத்துக்கு சொந்தமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை கடந்த இம்மாதம் முதலாம் திகதி முதல் 15 ரூபாவால் அதிகரித்து, 490 ரூபாவாக நிர்ணயித்திருந்தது.

இந்த விலை திருத்தமானது ஒக்டேன் 95 ரக பெற்றோலுக்கு மாத்திரமே பொருந்தும் என்றும்; பெரும்பாலான பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒக்டேன் 92 ரக பெற்றோல், டீசல் மற்றும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் அவை பழைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave A Comment