செஸ் வரியை படிப்படியாக நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இறக்குமதிப் பொருட்கள் மீதான ‘செஸ்’ வரியை படிப்படியாக நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய தொழில்துறைகளைப் பாதுகாத்தல் மற்றும் வருமானத்தை ஈட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக, செஸ் வரி உள்ளிட்ட சுங்க வரி அல்லாத பிற இறக்குமதி வரிகள் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.


இதன் விளைவாக, இடைநிலை மற்றும் உள்ளீட்டுப் பொருட்களுக்கான அதிக இறக்குமதி செலவு காரணமாக, ஏற்றுமதி சார்ந்த தொழில்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இது சர்வதேச சந்தையில் இலங்கைப் பொருட்களின் போட்டித்தன்மையைக் குறைப்பதோடு, ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்தியுள்ளது.


எனவே, உற்பத்திச் செலவைக் குறைப்பதன் மூலம் ஏற்றுமதி போட்டித்தன்மையை மேம்படுத்தவும், உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளுக்கு இணங்கவும், 2,634 வகைப்படுத்தப்பட்ட குறியீடுகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான செஸ் வரியை 2026 முதல் 2029 வரையிலான 4 ஆண்டுகளில் படிப்படியாக நீக்குவதற்கு நிதி அமைச்சராக ஜனாதிபதி மற்றும் தொழில்துறை அமைச்சர் சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave A Comment