ஆசியஅபிவிருத்திவங்கிஅதிகாரிகளுடன்   பிரதமர்ஹரிணிமுக்கியகலந்துரையாடல்

இலங்கையில் உயர்தரக் கல்வியின் தரம் மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு, கல்வித்துறையில் பணியாற்றுபவர்களின் தரம் மற்றும் வினைத்திறனை வலுப்படுத்துதல் மற்றும் கல்வித்துறையின் மேலாண்மைத் திட்டத்தை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகளுக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது, கல்விக்கான மனிதவள மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் திறமையான மனித வளங்களின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய இத்தகைய முறையான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய வலுவான மனிதவள தளத்தை உருவாக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் விருப்பம் தெரிவித்தனர். மேலும், இந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் சர்வதேச நிதி வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Comment