பிராந்திய நிலைவரங்கள் குறித்து இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் தற்போதைய பிராந்திய நிலைவரங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர்.

புதுடில்லியில் நடைபெற்ற ‘ரைசினா உரையாடல் – 2026’ (ரைசினா டயலொக்) இல் பங்கேற்பதற்காக இந்தியா சென்றிருக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளடங்கலாக ஏனைய நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடாத்திவருகிறார்.

அதற்கமைய இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நேற்று முன்தினம் (6) இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமான விதத்தில் அமைந்திருந்ததாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதாகவும், தற்போதைய பிராந்திய நிலைவரங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் அவர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று இந்தியாவின் தொடர் பங்காண்மைக்கு இலங்கை பெரிதும் மதிப்பளிப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், அமைச்சர் விஜித்த ஹேரத்துடனான சந்திப்பின்போது இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைவரங்கள் குறித்துக் கலந்துரையாடியதாகவும், ‘மகா சாகர்’ மற்றும் ‘அயலகத்துக்கு முதலிடம்’ ஆகிய இரு கொள்கைகளும் இருநாட்டு ஒத்துழைப்புக்கு வழிகாட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave A Comment