பொருளாதார வளர்ச்சிக்காக ஜ.எஸ்.பி . பிளஸ் வரிச்சலுகையைபாதுகாக்க வேண்டுமானால் சீர்திருத்தங்கள் அவசியம்

கலாநிதி ஜெகான் பெரேரா

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகவும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை பெருமளவுக்கு மக்கள் நேசமுடையதாக மாற்றியமைப்பதற்கு அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாதமைக்காக   எதிச்க்கட்சிகள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்கின்றன. வருவாய் திரட்டலுக்காகவும் அரசாங்க செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கிறது போன்று தெரிகிறது.

அரசாங்கத்தின் அடக்குமுறை ஆற்றலை வலுப்படுத்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் இணையவெளி பாதுகாப்பு சட்டத்தையும் இரத்துச் செய்யாதமைக்காக சிவில் சமூக குழுக்களும் அரசாங்கத்தை கடுமையாக சாடுகின்றன. இந்த இரு சட்டங்களையும் இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது. உறுதியளிக்கப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை தாமதிப்பதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், அது அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை மலினப்படுத்துவது மாத்திரமல்ல, இலங்கையின் பொருளாதார மீட்சியை மலினப்படுத்தும் ஆபத்தையும் கொண்டிருக்கிறது.

இலங்கையின் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்படவிருந்த வரிகள் தொடர்பில் அமெரிக்க அரசாஙகத்துடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு வசதியாக இலங்கைக்கு மூன்றுமாத கால ‘ மூச்சுவிடக்கூடிய ‘ அவகாசம் கிடைத்திருக்கிறது. இலங்கையின் மிகப்பெரிய ஏறனறுமதிச் சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. இலங்கை அதன் மிகப்பெரிய இரண்டாவது வர்த்தகப் பங்காளியான ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஏற்றுமதிச் சந்தைகளை பாதுகாப்பதிலும் அதேபோன்ற சவால்கள் தோன்றியிருக்கின்றன.  தற்போது இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை அனுபவிக்கிறது.

இந்த சலுகை ( அல்லது ஊக்குவிப்பு ) ஆடைகள், கடலுணவு உட்பட  6 ஆயிரத்துக்கும் அதிகமான உற்பத்திகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கை தீர்வையின்றி அனுப்புவதற்கு அனுமதிக்கிறது. ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையின் பயன்களை இலங்கை தொடர்ந்தும் அனுபவிக்க வேண்டுமானால், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சிமுறை ஆகியவற்றுடன் தொடர்படைய 27 சர்வதேச சமவாயங்களை பின்பற்றவேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. மனித உரிமைகள் நியமங்களை பின்பற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியமைக்காக 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வாபஸ் வாங்கியது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை 2017 ஆம் ஆண்டில் மீளப் பெற்றுக்கொண்டது என்றபோதிலும், அந்த சலுகை தொடருமா என்ற சந்தேகமும் எழுந்தது. மனித உரிமைகள் நிலைவரங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த சலுகையை மறுமதிப்பீடு செய்யுமாறு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை இரத்துச் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. பயங்கரவாத தடைச் சட்டம் அடாத்தான முறையில் ஆட்களை நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகளைக் கொணட்டிருப்பதாகவும் குறிப்பாக வடக்கு,  கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக அந்த சட்டம் பெருமளவுக்கு துஷ்பிரயோகம் செய்யப்டுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியது.  தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

ஆனால்,  பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் சட்டப் புத்தகத்தில் இருப்பது மாத்திரமல்ல,  இன்றுவரை அது பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதால், இந்த தடவை அணுகுமுறையில் ஏதாவது கனிவைக் காட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறதா என்று கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொறேனாவிடம் கேட்கப்பட்டபோது ” நாம் எல்லோருமே நெருக்கடியான காலகட்டம் ஒன்றின் ஊடாகவே சென்று கொண்டிருக்கிறோம்.  நிபந்தனைகளை குறைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு நீங்கள் மீண்டும்  கூறுகின்றீர்களா? இலவச அனுமதிச்சீட்டை தருமாறு கேட்கிறீர்களா!  நாங்கள் தீர்வையற்ற வரிச்சலுகையை உங்களுக்கு தருகின்றோம். ஆனால்,  நீங்கள் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டும்”  என்று அவர் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இலங்கை அதற்குரிய கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் உருப்படியான முன்னேற்றத்தைக் காண்பிக்கவில்லையானால் 2026 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையில் இருந்து விலக்க வைக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது.

பிரதான முன்னுரிமைகள்

இடையூறு எதுவுமின்றி பொருளாதாரம் சுமுகமாக செயற்படுவதை உறுதிசெய்வதே தற்போதைய தருணத்தில் அரசாங்கத்தின் பிரதான கவனம் என்று தோன்றுகிறது. அதாவது சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை உறூதியாகப் பின்பற்றுவதே அதன் அர்த்தமாகும். பொருளாதார வளர்ச்சியும் ஊழல் மற்றும் விரயம் ஒழிப்புமே கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியை அதிகாரத்துக்கு கொண்டுவந்தன என்று அரசாங்கம் உணருகிறது.  மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டிய  கடப்பாடுகளும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை செலுத்தும் என்பதால் அவற்றையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஜி.எஸ்.பி.பிளஸ் நிபந்தனைகள் ஒரு அசசுறுத்தல் அல்ல, ஒரு வாய்ப்பு என்றும் இலங்கை அரசாங்கம் அது விடயத்தில் மானசீகமான ஈடுபாட்டையும் வெளிப்படைத்தன்மையையும் சீர்திருத்தங்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட பாதை வரைபடத்தையும் வலியுறுத்துகிறது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தெளிவாகக் கூறியிருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை பின்பற்றுவதில் காண்பிக்கின்ற அதேயளவு பற்றுறுதியை ஜி.எஸ்.பி. பிளஸ் நிபந்தனைகளை நிறைவேற்றுவதிலும் அரசாங்கம் காண்பிக்க வேண்டியதும் ஊழலுக்கும் விரயத்துக்கும் முடிவைக்கட்டுவதும் அவசியமானதாகும். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டிருப்பது இது விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை உறுதிசெய்கிறது.

ஆனால், தற்போதைய தருணத்தில் ஆட்சிமுறையின் ஏனைய துறைகளில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது போன்று தெரிகிறது. அரசாங்கம் அதன் கவனத்தை  மேற்குறிப்பிட்ட துறைகளுடன் மட்டுப்படுத்துவதற்கே விரும்புகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், தேசிய நல்லிணக்கம் போன்ற முன்னுரிமைக்குரிய ஏனைய துறைகள் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் சர்வதேச சமூஙத்தின் சில பிரிவுகளுக்கும் முக்கியமானவையாக இருக்கின்ற போதிலும், அவற்றின் மீது கவனத்தைச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவதற்கு அதுவே காரணம்.

தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்த போதிலும் கூட, பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் தவறியிருக்கிறது. கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்காக குற்றஞ்சாட்ட்ப்பட்டவர்களை கைதுசெய்வதற்கும் நீதித்துறை நடைமுறைகளை பின்பற்றாமல் அவர்களை நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கக்கூடியதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது ஒரு முரண்நகையாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரம் மீதான அதன் பிடியை வலுப்படுத்துவதற்கு  தற்போதைய தருணத்தில் முன்னுரிமை கொடுத்திருக்கிறது போன்று தெரிகிறது. நிருவாக நடைமுறைகளில் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு தற்போதைய நிருவாக கடடமைப்புகளின் உயர்மட்டங்களில் எதிர்ப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. தீர்மானங்களை எடுக்கும் பணிகளுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவர்களுக்கும்  அவர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டியவர்களுக்கும் இடையில் பூசல் நிலவுகிறது.

அதன் காரணத்தினால்தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய செயற்த்டத்தை தொடக்கிவைக்கும் வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க அரசாங்க அதிகாரிகள் புதிய நெறிமுறைகளுக்கு பொருத்தமானவர்களாக தங்களை மாற்றிக் கொள்வதற்கு ஆறு மாதகால அவகாசத்தை வழங்குவதாகவும் அவ்வாறு அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளத் தவறின்ல் அரசாங்கத்தினால் அவர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் கூறவேண்டியேற்பட்டது.

உறுதியளிக்கப்பட்ட எதிர்காலம்

எதிரணி கட்சிகளை குறிப்பாக சிறுபான்மைச் சமூககக்கட்சிகளை  உள்ளடக்கிய பெருமளவுக்கு சகல தரப்புகளையும் அரவணைக்கும் ஆட்சிச் செயன்முறையில்  ஈடுபடுவது அரசாங்கத்துக்கும் நீண்டகால அடிப்படையில் நாட்டின் உறுதிப்பாட்டுக்கும் முக்கியமானதாக இருக்கும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுகின்ற மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான உறுதிமொழிகளைக் கௌரவிப்பதன் மூலமாக  தேர்தல் ஆணையை சகல இலங்கையர்களுக்குமான நிலைபேறான முன்னேற்றத்துக்கான ஆணையாக அரசாங்கத்தினால் மாற்றமுடியும்.

குறிப்பாக, சிறுபான்மையினச்  சமூகங்களின் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது நீண்டகால அடிப்படையில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மைக்கு முக்கியமானதாக இருக்கப்போகின்றது. சர்வதேச சமூகம்  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினதும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினதும் பிரசாரங்களினால் பாதிக்கப்படக்கூடியது. இந்த இரு குழுக்களும் இனமோதலுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கங்கள் தவறியதை மிகவும் கடுமையாக கண்டனம் செய்துவருகின்றன.

போர்க்கால மனித உரிமைகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய பிரச்சினைகளையும் இனமோதலுக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பிலான பிரச்சினைகளையும் கையாளவேண்டிய அவசியத்தைக்கொண்ட தேசிய நல்லிணக்கச் செயன்முறை மீீது இதுவரையில் அரசாங்கம் கவனத்தைச் செலுத்தவில்லை. இந்த பிரச்சினைகளை  பின்னர் ஒரு கட்டத்தில் தொடங்கப்படக்கூடிய — பிரச்சினைகள் தீர்வின் இரண்டாம் கட்டத்தில் கையாளுவதற்கென்று அரசாங்கம் வைத்திருக்கின்றது போன்று தோன்றுகிறது.

மாகாணசபை தேர்தல்கள் ஆறு வருடங்களுக்கும் அதிகமான காலமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்ற போதிலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் மற்றும் அவருடனான பேச்சுவார்த்தைகள் வரை அந்த தேர்தல்களை அடுத்தவருடம் நடத்துவது என்ற நிலைப்பாட்டையே அரசாங்கம் எடுத்திருந்தது. அத்தகையதொரு நிலைப்பாடு சிறுபான்மைச் சமூகங்களின் கட்சிகளுக்கு குறிப்பாக, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஏற்புடையது அல்ல.

மக்களுடைய இனம் அல்லது மதம் கடந்து அவர்கள் சகலரும் சமத்துவமாக நடத்தப்படுவதை உறுதிசெய்வதே மற்றத்தைக் காண்பிக்கும் அரசாங்கத்தின் வழிமுறையாக இருந்து வந்திருக்கிறது. இனால், காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைகள், இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை அவற்றின் சட்டபூர்வமான உரிமையாளர்களுக்கு திருப்பிக்கையளித்தல், நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ளதற்கு சமமானதாக வடக்கு,  கிழக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைத்தல், மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குதல் மற்றும் மாகாணசபை தேர்தல்களை நடத்துதல் போன்ற பிரச்சினைகளுக்கு பெருமளவுக்கு துரிதமான தீர்வுகளைக் காணவேண்டிய தேவை ஒன்று இருக்கிறது.

முறைமை மாற்றம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக உறுதியளித்துக் கொண்டே தேசிய மக்கள் சக்தி ஆட்சியதிகாரத்துக்கு வந்தது. அந்த வாக்குறுதி ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார முகாமைத்துவத்தில் இருந்து நல்லிணக்கத்தையும் சர்வதேச ஒத்துழைப்பையும் உள்ளடக்கிய ஜனநாயக ஆட்சிமுறையை தழுவியதாக விரிவுபடுத்தப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடரவேண்டுமானால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெற்றியடைவதை உறுதிப்படுத்த வேண்டுமானால் பிரச்சினைகள் தீர்வுக்கான இரண்டாம் கட்டம் வரை காத்திருத்தலாகாது.

Leave A Comment