டிசம்பரில் பணவீக்கம் 2.1 சதவீதமாக மாற்றமின்றிப் பதிவு
- Editor
- January 5, 2026
- பொருளாதாரம்
- பொருளாதாரம்
- 0 Comments
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2.1 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி காரணமாகக் கடந்த டிசம்பரில் மாதத்துக்கு மாத விலைகளில் கணிசமானளவு அதிகரிப்பொன்று ஏற்பட்ட போதிலும், சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கம் இதற்குப் பிரதானமாகத் துணையளித்திருந்தது.
உணவுப்பணவீக்கம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் 3 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்ட அதேவேளை, உணவல்லாப்பணவீக்கம் நவம்பரில் பதிவான 1.7 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 1.8 சதவீதமாக அதிகரித்தது.
இருப்பினும் மாதத்திற்கு மாத அடிப்படையில் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கடந்த டிசம்பரில் 1.26 சதவீதம் எனும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றைப் பதிவுசெய்தது. சீரற்ற காலநிலைசார் நிலைமைகள் காரணமாக ஏற்பட்ட வழங்கல் பக்க இடையூறுகளைப் பிரதிபலித்து, உணவு வகைகள் 1.25 சதவீதத்தினாலும், உணவல்லா வகைகள் 0.01 சதவீதத்தினாலும் இவ்வதிகரிப்புக்குப் பங்களிப்புச் செய்தன.
அதேவேளை பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கப் போக்குகளைப் பிரதிபலிக்கும் மையப்பணவீக்கம் கடந்த நவம்பரில் 2.4 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 2.7 சதவீதத்துக்கு அதிகரித்தது.

