மாகாண சபை தேர்தலுக்கானசகல அழுத்தங்களையும்நாம் பிரயோகிக்கின்றோம் – சி.வி.கே. சிவஞானம்
- Editor
- February 5, 2026
- கருத்துக்கள், தமிழ் Header
- கருத்துக்கள்
- 0 Comments
மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தாமலிருப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் தேர்தலை நடத்துவதற்கான சகல அழுத்தங்களையும் நாம் பிரயோகிப்பதற்காகச் செயற்படுகின்றோம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவரும், வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி: தமிழரசுக்கட்சியின் பதில் தலைவராக புத்தாண்டில் முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கும் செயற்பாடுகள் என்னவாக உள்ளன?
பதில்: புத்தாண்டில் நம்பிக்கையுடன் காலடியெடுத்து வைத்திருக்கின்றோம். இந்தப் புதிய ஆண்டில் நாங்கள் ஒரு இனமாக போராட வேண்டிய தருணத்தில் உள்ளோம்.
நீண்;டகாலமாக தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வருகின்ற கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் உணர்வுகளையும் அவர்களின் அபிலாஷைகளையும் பெற்றுக்கொடுப்பதற்காக தொடர்ச்சியாக உத்வேகத்துடன் செயற்படுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
கேள்வி: புதிய அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் எவ்விதமான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன?
பதில்: மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறி மக்களின் ஆணையைப்பெற்று ஆட்சிபீடத்தில் அமர்ந்துள்ளவர்கள் தமது முதலாவது ஆட்சிக்கால ஆண்டைப் பூர்த்தி செய்துள்ளார்கள்.
அவர்கள் பொருளாதார ரீதியான நெருக்கடிகளுக்குள் நாட்டைப் பொறுப்பேற்றிருந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இயற்கை அனர்த்தங்களும் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் அவர்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக முழுமையான மதிப்பீட்டை வெளிப்படுத்த முடியாதுள்ளது.
எவ்வாறாக இருந்தாலும், வடக்கு,கிழக்கில் ஆட்சியாளர்கள் மிகுந்த பாகுபாட்டுடன்தான் செயற்படுகின்றார்கள் என்பது மிகத்தெளிவாகத் தெரிகின்றது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரையில் வடக்கு,கிழக்கு 34 உள்ளுராட்சி மன்றங்களின் ஆளுகையைக் கொண்டிருக்கின்றது. அதேபோன்று, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிக பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களையும் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், எமது கட்சி மற்றும் பிரதிநிதிகளுக்கான உரிய அங்கீகாரத்தினை அளிப்பதில்லை. இந்தச் செயற்பாடுகள் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு தெரிந்து நடைபெறுகின்றதா இல்லையா என்ற சந்தேகமும் எமக்குள்ளது.
கேள்வி: ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துமென்று கருதுகின்றீர்களா?
பதில்: மாகாண சபைகளுக்கான தேர்தல் மட்டுமல்ல தேர்தலொன்று நடக்காது என்று கூறுவது அரசியல் ரீதியாக தவறாகும். அரசியல் செயற்பாடுகளே சாத்தியப்பாட்டுக்கான முயற்சிகள்தான்
அந்தவகையில், ஜனாதிபதி அநுரகுமாரவை நேரடியாகச் சந்தித்தபோது நாங்கள் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கையை வெளிப்படையாக முன்வைத்திருந்தோம்.
அதற்கும் மேலதிகமாக நாங்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் உட்பட எல்லோரும் ஒன்றாகத்தான் சந்திப்பை நடத்தியிருந்தோம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளும் இணைந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பகிரங்கமாகவே வலியுறுத்தியிருந்தோம்.
இந்த விடயத்தில் கஜேந்திரகுமார் அரைகுறையாக சில விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் அவரும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டால் போட்டியிடுவார் என்பது முக்கியமான விடயமாகும்.
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது இருப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கலாம். ஆனால் நாங்கள் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதோடு மட்டுமல்லாது அதற்கான சாத்தியமுள்ள அனைத்துவழிகளையும் பயன்படுத்தி அழுத்தமளித்து வருகின்றோம்.
கேள்வி: மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் சட்டச் சிக்கல்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றதே?
பதில்: முன்னதாக, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை பிற்போடுவதற்கு எல்லை மீள்நிர்ண விடயங்களை முன்வைத்ததோடு கலப்பு முறைமையை மையப்படுத்தி காலம் கடத்த முனைந்தனர்.
இருப்பினும் அதற்குரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட நிலையில்தான் தேர்தலை நடத்தினார்கள். உண்மையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 40க்கு 60 அடிப்படையில் கலப்பு முறைமையை மையப்படுத்தி முன்னெடுக்க தீர்மானித்தார்கள்.
அச்சமயத்தில் நான் முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவில் முன்னிலையாகி, குறித்த கலப்புமுறை சதவீதத்தை 70இக்கு 30ஆக மாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாது அன்றைய அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாட்டின் பிரதிபலனை தற்போது அனுபவிக்கின்றார்கள். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் உள்ளுராட்சி மன்றங்களின் நிலைமைகள் மிகவும் மோசமாகவே உள்ளன.
அதேபோன்று தான் மாகாண சபைகளுக்கான தேர்தல் விடயத்திலும், நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தங்களை முன்வைத்து வருகின்றோம். மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் எல்லை நிர்ணயத்தின் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாராளுமன்ற தெரிவுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாம் மாகாண சபைகளுக்கான தேர்தலை காலதாமதப்படுத்துவதோடு அந்த தேர்தலை நடத்தாமலிருப்பதற்கும் அரசாங்கம் முனைகின்றது. ஆனால் அது சாத்தியமற்ற விடயமாகும். பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு சுமந்திரன் தனிநபர் பிரேரணையை முன்னதாக சமர்ப்பித்திருந்தார். அதேபிரேரணையை தற்போது சாணக்கியன் எம்.பி மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள போதும் அதனை அது இன்னமும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது
இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களை உள்ளீர்த்தல் ஆகிய விடயங்களை மையப்படுத்தி காலத்தினைக் கடத்துவதற்கே முயற்சிக்கின்றார்கள்.
கேள்வி: தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான இணைவு சாத்தியப்படுமா? அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றீர்களா?
பதில்: 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் பதில் தலைவராக பதவியேற்பதற்கு முன்னைய காலத்திலிருந்து தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையான நிலைப்பாடுகள் உருவாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அதற்கு அமைவாகத்தான் பல்வேறு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகி அவற்றை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பு எமக்கு வெற்றிகரமாக அமைந்துள்ளது. அவர்களுடன் இணைந்து பணிகளை முன்னெடுப்பதற்கும் நாம் தயாராகவுள்ளோம்.
கேள்வி: தற்போதைய ஒன்றிணைவானது எவ்வாறான நிலைமைகளில் உள்ளது?
பதில்: தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவானது, கடந்த காலங்களைப்போன்று அனைத்துக்கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வந்து பொதுச்சின்னத்தில் பொதுப்பெயரில் இணைந்து செயற்படுவதுதான் ஒற்றுமை என்றாகிவிடாது.
தற்போதைய சூழலுக்கு அமைவாக, அனைத்துக் கட்சிகளும் தமது தனித்துவங்களைப் பேணிக்கொண்டு, அதேநேரம், தமிழ் மக்கள் முகங்கொடுக்கக் கூடிய பொதுவான விடயங்களில் ஒன்றிணைவதே பொருத்தமானதாக இருக்கும்.
அதனை மையப்படுத்தியே செயற்பட்டு வருகின்றோம். அந்த வகையில் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள், தேவைகள் மற்றும் ஏனைய பிற விடயங்களில் நாம் ஒன்றிணைந்து செயற்படுவதுடன் சுமுகமான நிலையிலேயே தற்போது பயணிக்கின்றோம்.
கேள்வி: தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கான சாத்தியப்பாடு உண்டா?
பதில்: தற்போதைய நிலையில் தேர்தலை மையப்படுத்தியதாக எமது உரையாடல்கள் இருக்கவில்லை. சாத்தியப்படக்கூடிய விடயங்கள் அனைத்திலும் ஒன்றிணைந்து பயணிப்பதுதான் எமது நிலைப்பாடாக உள்ளது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றுக்கு பிரதான இடத்தினை வழங்கியுள்ளோம். எம்மைப்பொறுத்தவரையில் தேர்தலொன்று வருகின்றபோது அதில் இணைந்து செயற்படுவது பற்றி ஆராயலாம்.
தேர்தல் இல்லாத சூழலில் அதுபற்றி உரையாடி வீணான குழப்பங்களை ஏற்படுத்துவதை விடவும் தற்போது ஏனைய முக்கிய விடயங்களில் ஏகோபித்த செயற்பாடு அவசியமாக உள்ளது என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளோம்.
தேர்தல் அறிவிக்கப்படுகின்றபோது அத்தருணத்தில் காணப்படுகின்ற சூழலுக்கு அமைவாக தனித்தனியாக போட்டியிடுவதா இல்லை இணைந்து போட்டியிடுவதா என்று தீர்மானிப்போம்.
கேள்வி: தமிழ்க் கட்சிகளின் தற்போதைய இணைவையும் செயற்பாட்டையும் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்று அழைக்க முடியுமா?
பதில்: அவ்வாறு அழைக்க முடியாது. என்னைப்பொறுத்த வரையில் அனைத்து தரப்பினரும் தமக்கான தனித்துவங்களை பேணுகின்ற அதேவேளை, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதுதான் நிலைப்பாடாகும்.
உதாரணமாகக் கூறினால் தென்னிலங்கையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தற்போது இணைந்து செயற்படுவது பற்றி பேசுகின்றார்கள். ஆனால் அவர்கள் இரு கட்சிகளாக என்றுமே இருப்பார்கள்.
அதுபோன்று தான் தமிழ் மக்களின் விடயங்கள் சார்ந்து நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம். அதற்காக அந்த இணைவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நிலைக்குள் மீண்டும் செல்ல முடியாது. அந்த விடயம் பற்றி காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
கேள்வி: தமிழரசுக்கட்சி சமஷ்டிக் கோரிக்கையை கைவிட்டு விட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றாரே?
பதில்: இல்லை, அவரது குற்றச்சாட்டு தவறானதாகும். இலங்கைத் தமிழரசுக்கட்சி தான் தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு வேண்டும், அதுவே தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் என்பதை முதன்முதலாக வெளிப்படுத்தி அதற்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகின்ற தரப்பாகும்.
அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது நாம் கையளித்த ஆவணத்திலும் சரி, உரையாடலின்போதும் சரி நாங்கள் எமது நிலைப்பாட்டை மிகத்தெளிவாக கூறியுள்ளோம். தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளோம்.
விசேடமாக ஜெய்சங்கருடனான உரையாடலின்போது நானே தான் முதலாவதாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு விடயத்தினை வலியுறுத்தினேன். அந்த விடயத்தினை ஏனைய தலைவர்களும் உறுதி செய்துள்ளார்கள்.
ஆகவே கஜேந்திரகுமார் எந்த அடிப்படையில் நாங்கள் சமஷ்டியைக் கைவிட்டதாக கூறுகின்றார் என்பது எனக்குத் தெரியவில்லை. சில வேளைகளில் அவர் அரசியலுக்காக அவ்விதமான பிரசாரத்தினை முன்னெடுக்கலாம்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரையில் சமஷ்டியை ஒருபோதும் கைவிடப்போவதுமில்லை. அதிலிருந்து விலகப்போவதுமில்லை. ஏனென்றால் தமிழரசுக்கட்சி கோட்பாட்டின் அடிப்படையில் பயணிக்கும் கட்சியாகும்.
கேள்வி: தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் பயணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?
பதில்: தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு நானும், பொதுச்செயலாளர் சுமந்திரனும் இணைந்து எழுத்து மூலமான அழைப்பினை விடுத்திருந்தோம். அந்த அழைப்பு கடிதத்தினை வைத்தியர் சத்தியலிங்கமே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கையளித்திருந்தார். குறிப்பாக, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு எவ்வாறு அழைப்புக்கடித்தினை அனுப்பினோமோ அதேபோன்றுதான் முன்னணிக்கும் அனுப்பியிருந்தோம்.
ஆனால் இதுவரையில் அக்கடிதம் சம்பந்தமாக முன்னணி எவ்விதமான பதில்களையும் வழங்கவில்லை. அது அவர்களுடைய விருப்பம். அல்லது ஜனநாயக உரிமை.
கஜேந்திரகுமார் என்ற தனி மனிதன் மீது எனக்கு மதிப்பும் அபிமானமும் உண்டு. நான் அவரை அதிகமாக விமர்சிப்பதில்லை. அவர் நீண்டகாலமாக கொள்கை நிலைப்பாட்டில் அது சற்றே கடுமையாக இருந்தாலும் உறுதியாக இருக்கின்றவராக இருக்கின்றார்.
அந்த வகையில் அவருடைய அரசியல் செயற்பாடுகள் மீது எனக்கு சில விமர்சனங்கள், கவலைகள் இருந்தாலும் அவருடைய பங்களிப்பும் எமக்கு தேவையாக உள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எம்முடன் இணைந்து செயற்படாது விட்டாலும்கூட, அவர்கள் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான அழைப்பினை மீண்டும் விடுக்கின்றோம்.
கேள்வி: இலங்கைத் தமிழரசுக்கட்சி கரைதுறைப்பற்று பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்திக்கு தாரைவார்த்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: அக்குற்றச்சாட்டுக்களை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். குறித்த விடயமானது முழுக்க முழுக்க தனிநபர் ஒருவரைச் சார்ந்துள்ள விடயமாகும். லோகேஸ்வரன் தானாகவே பதவி விலகினார். அதன்பின்னர் புதிய தலைமையை அவர் உள்ளடங்கலாகவே முன்மொழிந்தோம். சபையில் புதிய தெரிவின்போது பகிரங்க வாக்கெடுப்பினைக் கோருமாறு அறிவுறுத்தியிருந்தேன்.
ஜனநாயக தேசியக் கூட்டணியின் மாவட்டத்தலைமைக்கும் அதுபற்றி அறிவுறுத்தியிருந்தேன். ஈற்றில் அவர்களாக முடிவெடுத்து செயற்பட ஆரம்பித்தமையால் அனைத்தும் தலைகீழாகியது. அந்த விடயத்திற்கு கட்சி என்ற அடிப்படையில் நாம் பொறுப்புக்கூற முடியாது.
கேள்வி: தமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரன், சிறிதரன் தலைமையில் இரு அணிகள் இயங்கி வருகின்றனவே?
பதில்: கட்சிக்குள் இரு அணிகள் இல்லை. சிலசில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் காணப்படுவது உண்மை. ஜனநாயகக் கட்சிக்குள் அவ்விதமான நிலைமைகள் இருப்பது யதார்த்தமான விடயமாகும். ஆகவே அதனை பெரிதுபடுத்த முடியாது. கட்சிக்குள் இரு அணிகள் காணப்பட்டு அவற்றுக்குள் முரண்பாடுகள் நடைபெற்றன என்று நீங்கள் அறிந்தீர்களா? அவ்விதமான நிலைமைகள் எவையும் இல்லை. சுமுகமாகவே பயணிக்கின்றோம்.
கட்சியை பிளவுபடாது பார்ப்பதே என்னுடைய முயற்சியும், செயற்பாடும், கடமையாகவும் உள்ளது. இதுவரையில் அந்தச் செயற்பாட்டில் நான் வெற்றி கண்டுள்ளேன் என்றே கருதுகின்றேன். அதற்கான எனது அர்ப்பணிப்பு தொடரும்.
கேள்வி: தமிழரசுக்கட்சிக்கு எதிரான வழக்கு எந்த நிலைமையில் உள்ளது?
பதில்: நீதிமன்ற விடயங்கள் பற்றி நான் பேசவில்லை. அதனை நீதிமன்றமே தீர்மானிக்கும். நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்ததன் பின்னர் எத்தனை மத்திய குழுக்கூட்டங்கள் நடைபெற்றுவிட்டன. அதில் நாங்கள் வழக்கு குறித்து பேசுவதை தவிர்த்துவிட்டோம். இயற்கை நீதிக்கு அமைவாக நீதிமன்றின் இறுதியான தீர்ப்பினை நாம் ஏற்றுக்கொள்வோம்.

