காற்றாலை, கனியமணல் திட்டம் ஒருமாதகாலத்துக்கு இடைநிறுத்தம்

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் காற்றாலை திட்டத்தினை ஒருமாத காலத்துக்கு இடைநிறுத்தவும் கனிய மணல் திட்டத்தினை முற்றாக கைவிடவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் 13-08-2025அன்று  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பில் மன்னார் மாவட்ட சிவில் அமைப்பின் பிரதிநிதிகளான வி.எஸ்.சிவகரன், அருட்தந்தை ஜெயபாலன், அருட்தந்தை மார்க்கஸ், மற்றும் ஆலம் உள்ளிட்ட குழுவினர், வன்னி மாவட்ட ஆளும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளான செல்வம் அடைக்கலநாதன், வைத்தியர் சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன், ரிஷாத் பதியுதீன், காதர் மஸ்தான், ஜெகதீஸ்வரன் ஆகியோரும், விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் பிரதியமைச்சர் உபாலி பன்னிலகே ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மன்னாரில் முன்னெடுக்கப்படுகின்ற காற்றாலைத்திட்டம் தொடர்பில் மக்களிடையே காணப்படுகின்ற கரிசனைகளை சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக, மன்னார் மாவட்டம் அதி உணர்திறன் மிக்க பகுதியாக இருப்பதோடு யுனஸ்கோவினால் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக உள்ளது என்ற விடயத்தினை சுட்டிக்காட்டினார்கள்.

அத்தோடு காற்றாலைக்கோபுரங்கள் அமைக்கப்படுவதால் ஏற்படுகின்ற சூழல்பாதிப்பு விடயங்களையும் அவர்கள் பட்டியலிட்டுக் கூறினார்கள். இருந்தபோதும், ஆரம்பத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க காற்றாலை மின்சக்தியின் பங்களிப்பு மற்றும் நாட்டின் மின்சக்தி நுகர்வுத்தேவை உள்ளிட்ட விடயங்களை மேற்கோள்காண்பித்தும் எதிர்வரும் காலத்தில் பொருளாதார ரீதியாக அதன் பங்களிப்பை சுட்டிக்காண்பித்தும் கருத்துக்களை வெளியிட்டார்.

பின்னர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளில் சிவகரன், காற்றாலைத் திட்டத்தினை மன்னார் தீவுக்குள் முன்னெடுப்பதால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை மீண்டும் சுட்டிக்காட்டியதோடு தீவுக்கு வெளியில் அத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான பகுதிகள் காணப்படுவதையும் தெளிவு படுத்தினார்.

குறித்த கருத்துக்களை மையப்படுத்தி செல்வம் அடைக்கலநாதன், ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் தங்களை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினர்.
இவ்வாறான கருத்துப்பரிமாற்றங்களை அடுத்து இறுதியாக, தற்போது மக்கள் போராடிக்கொண்டிருக்கையில் மக்களின் எதிர்ப்புக்களை மீறி இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆகவே மக்களின் நிலைப்பாடுகளை அறிவதற்கு உரிய கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது என்று ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுடனான கலந்துரையாடல்களை மேற்கொண்டு இறுதி தீர்மானம் எடுப்பதெனவும் காற்றாலை திட்டம் குறித்து உரையாடல்களை நடத்துவதற்கு ஒருமாத கால அவகாசத்தினை கோரியதோடு அதுவரையில் அத்திட்டத்தினை முன்னெடுப்பதை இடைநிறுத்துவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களுடன் உரையாடல்களை மேற்கொள்வதற்காக குழுவொன்றை அமைப்பதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தற்போது 70மெஹாவோல் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான காற்றாலைக் கோபுரங்களை அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு அத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அத்திட்டத்தினை பூர்;த்தி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் காற்றாலைத்திட்டங்கள் அனைத்தும் மன்னார் தீவுக்கு வெளியில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைவிடவும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள காற்றாலை கோபுரங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களால் தான் மக்கள் அதிருப்திகளை கொண்டிருக்கின்றார்கள். அந்தத் திட்டம் சம்பந்தமாக மக்களுடன் உரையாடல்கள் நடைபெறாமையின் காரணத்தினால் தான் தற்போது மக்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றனர் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதேநேரம், கனிய மணல் அகழ்வு தீவினை முற்றாக அழிக்கின்ற விடயம் என்பதால் குறித்த திட்டத்தினை முழுமையாக கைவிடுமாறு சந்திப்பில் பங்கேற்ற அனைவரும் சுட்டிக்காட்டிய நிலையில் அதற்கும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
குறித்த தகவல்;களை செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் உறுதிப்படுத்தினர்

Leave A Comment