அமெரிக்கதீர்வைவரி 30 சதவீதமாககுறைப்பு;ஜனாதிபதிக்குடொனால்ட்ட்ரம்ப்கடிதம்மூலம் அறிவிப்பு

அமெரிக்கா இலங்கையிருந்தான இறக்குமதிகளுக்கு விதித்திருந்த 44 சதவீத   வரி, 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்த வரி நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி 185 நாடுகளுக்கு அமெரிக்கா தீர்வை வரிகளை அதிகரித்திருந்தபோது, இலங்கைக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே தற்போது 14 சதவீத குறைப்பு எட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி   44 சதவீத வரியை அறிவித்த பின்னர், இலங்கை அதிகாரிகள் அமெரிக்க வர்த்தகக் குழுவினருடன் வாஷிங்டனில் பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இந்த பேச்சுக்களின் விளைவாகவே  44 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக வரி  குறைக்கப்பட்டிருக்கிறது.  எனினும்  இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு இந்த 30 சதவீத வரியும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய வரி ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

இந்த வரி குறைப்பு குறித்து குறிப்பிட்டுள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, “இது இலங்கைக்கு ஒரு சாதகமான தருணம்” என்றும், “அமைதியான, உறுதியான இராஜதந்திரத்தின்” விளைவு என்றும் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த வரி விதிப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “இது பலவீனமான மற்றும் அகங்காரம் நிறைந்த பேச்சுவார்த்தைகளின் விளைவு,” என்றும், “3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஏற்றுமதிகள் கேள்விக்குறியாகியுள்ளன,” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா “வியட்நாம் 20 வீத வரியைச் செலுத்தும் நிலையில், இலங்கை ஆடைத்துறைக்கு இது பெரும் சவாலாக அமையும்   350,000 க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளும், 600,000 க்கும் அதிகமான மறைமுக வேலைவாய்ப்புகளும் இதில் பாதிக்கப்படலாம்.    அரசாங்கம் உடனடியாக அமெரிக்க வர்த்தகக் குழுவுடன் உறுதியான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியிருக்கிறார். 

அமெரிக்கா அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கும் 30 வீத வரியை விதித்துள்ளது. அதேவேளையில், புருனே மற்றும் மால்டோவாவுக்கு 25 வீத வரியும், பிலிப்பைன்ஸுக்கு 20 வீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், தென்கொரியா, மலேசியா, கஸகஸ்தான், தியூனிஸியா ஆகிய நாடுகள் 25 சதவீத தீர்வை வரியையும் தென் ஆபிரிக்கா, பொஸ்னியா ஆகியன 30 சதவீத தீர்வை வரியையும் இந்தோனேசியா 32 சதவீத தீர்வை வரியையும் பங்களாதேஷ் மற்றும் சேர்பியா என்பன 35 சதவீத தீர்வை வரியையும் தாய்லாந்து, கம்போடியா என்பன 36 சதவீத தீர்வை வரியையும் மியன்மார் மற்றும் லாவோஸ் என்பன 40 சதவீத தீர்வை வரியையும் எதிர்கொள்ளவுள்ளன.

Leave A Comment