இனப்பிரச்சினை தீர்வு  குறித்து பேசவில்லை – ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சிவ்வா செவ்வி

எனது இந்திய விஜயத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு, 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமான விடயங்கள் பேசப்படவில்லை என்று  மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குச் சென்று திரும்பியதன் பின்னர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி: உங்கள் கட்சி இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது என்றும், தற்போது திடீரென ஒரு திருப்பத்தை மேற்கொண்டு இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கத் தீர்மானித்துள்ளதாகவும் பரவலாகக் கூறப்படுகிறதே?

பதில்: நாங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல. அன்று ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கமும், இலங்கையில் ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கமும் பின்பற்றிய அரசியல் கொள்கைகளையே நாங்கள் எதிர்த்தோம். எனவே, ராஜீவ் காந்தி மற்றும் ஜே.ஆர். ஜயவர்தன ஆகிய இரு அரசாங்கங்களையும் நாங்கள் எதிர்த்தோம்.  இது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னணியில் நிகழ்ந்தது. அந்த ஒப்பந்தம் நடந்திருக்கக் கூடாதவொன்று என்று இன்றும் நாங்கள் கூறுகிறோம். அது 38 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு, இப்போது உலகம் மாறிவிட்டது. இந்தியாவும் மாறிவிட்டது, நாங்களும் மாறிவிட்டோம். கடந்த காலத்தை எதிர்கால உறவுகளுக்கு தடையாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. இந்த வாதத்தின்படி பார்த்தால், பிரிட்டனுடன்கூட எங்களால் தொடர்புகளை வைத்திருக்க முடியாது. அவர்கள் எங்களை காலனித்துவப்படுத்தினர், 1815 கிளர்ச்சியை ஒடுக்கினர். ஆனால் நாம் அதைத்தாண்டி வந்துவிட்டோம். வரலாறு என்பது வரலாறு தான், அதிலிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொண்டோம். தற்போதைய காலத்திற்கு ஏற்ப நாம் செயற்பட வேண்டும். கடந்த காலத்திலேயே வாழ்வது தவறு.

கேள்வி: உங்கள் கட்சியின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு, குறிப்பாக 1988-1990 காலப்பகுதியில் பெரும் கலவரங்களுக்கு வழிவகுத்தது. அப்போது பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் மற்றும் பொதுச்சொத்துக்கள் அழிக்கப்படுவதைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா?

பதில்: அந்த அழிவைத் தடுத்திருக்க வேண்டியவர் ஜே.ஆர். ஜயவர்த்தன தான். அவர் தனது அமைச்சரவைக்குக் கூடத்தெரிவிக்காமல், பொதுமக்களை இருட்டில் வைத்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்திருந்தால், அத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. அவரது அமைச்சரவை அமைச்சராக இருந்த காமிணி ஜயசூரிய இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதவி விலகினார். மக்கள் அமைதியான முறையில் போராடினர், ஆனால் ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கமே போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி, 100-க்கும் மேற்பட்டவர்களைச் சுட்டுக்கொன்று போராட்டத்தை வன்முறையாக மாற்றியது.

கேள்வி: இந்திய-சீன உறவுகளை ஜே.வி.பி எவ்வாறு சமநிலைப்படுத்துகிறது?

பதில்: எமது வெளியுறவுக்கொள்கை தெளிவானது. நாங்கள் எந்த நாட்டையும் ஏமாற்றுவதோ அல்லது அந்நாடுகளுக்கு பொய் சொல்வதோ இல்லை. எமது உறவுகளில் நாங்கள் நேர்மையாக இருக்கிறோம். இந்தியா எமது அண்டை நாடு, எமக்கு நெருங்கிய உறவுகள் உள்ளன. அதேபோன்று சீனாவும் எமது நண்பன். பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷமும் எமது நண்பர்களே. அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முயற்சியால் கொழும்பில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடந்தமை எமது வெளியுறவுக் கொள்கையின் வெற்றிக்குச் சான்றாகும். ஒரு நாட்டை மற்றொன்றுக்காக நாங்கள் காட்டிக்கொடுக்க மாட்டோம். தற்போதைய யுகத்திற்கு இதுவே சிறந்த வெளியுறவுக் கொள்கை.

கேள்வி: இந்தியா மற்றும் சீன உறவுகளைச் சமநிலைப்படுத்துவதில் ஏதேனும் தடைகள் இருந்தனவா?

பதில்: எவ்வித தடைகளும் இல்லை. ஏனெனில் இரு நாடுகளையும் நாம் நண்பர்களாகக் கருதுகிறோம், தேவைப்படும் நேரத்தில் இரு நாடுகளும் எமக்கு உதவியுள்ளன. நான் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் சென்றுள்ளேன், இரு நாடுகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை உள்ளன.

கேள்வி: ஜே.வி.பி நிறுவுனர் ரோஹண விஜேவீர இந்தியாவை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்தார் மற்றும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். நீங்கள் அவரது கொள்கைகளைக் கைவிட்டுவிட்டீர்களா?

பதில்: இந்தியாவும் இலங்கையும் தொப்புள்கொடி உறவால் பிணைக்கப்பட்டுள்ளன. எமது கலாசாரம் மற்றும் மதம் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. பௌத்தம் இந்தியாவிலிருந்துதான் வந்தது. இந்தியா எமது உடனடி அண்டை நாடு. இலங்கைக்குத் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளைக் கொண்ட இந்திய அரசாங்கங்கள் இருந்தபோது தான் சிக்கல்கள் எழுந்தன. நாங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு – அதாவது அந்த நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் – எதிரானவர்களாக இருந்ததில்லை. சில இந்திய அரசாங்கங்களின் கொள்கைகளையே நாங்கள் எதிர்த்தோம்.

கேள்வி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளுடன் ஜே.வி.பி-என்.பி.பி ஒத்துப்போகிறதா?

பதில்: ராஜீவ் காந்திக்குப் பிறகு வந்த அனைத்து அரசாங்கங்களும் இலங்கை மீது கட்டாயப்படுத்தும் கொள்கையைப் பின்பற்றவில்லை என்று நான் நினைக்கிறேன். எமது இறையாண்மையைப் பாதுகாத்துக்கொண்டு பிரதமர் மோடி அரசாங்கத்துடன் நட்பு ரீதியாகச் செயற்பட முடியும். பிரதமர் மோடி அரசாங்கத்தை எமது உண்மையான நண்பனாக நாங்கள் கருதுகிறோம்.

கேள்வி: இலங்கையின் மீதான இந்தியாவின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்து இங்கிருக்கும் பொதுமக்களிடையே இன்னும் சந்தேகம் இருப்பதாக நீங்கள் கருதவில்லையா?

பதில்: சில இந்திய அரசாங்கங்களின் நடவடிக்கைகளால் அந்தச் சந்தேகங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளாலேயே அந்தச் சந்தேகம் நீங்கும். தற்போதைய இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளால் அந்தச் சந்தேகங்கள் மறைந்து வருவதாக நான் உணர்கிறேன். இந்தியாவை பூதமாகக் காட்டச் சிலர் முயற்சிக்கின்றனர். அவர்கள் தான் இந்தியா கேட்டால் அதன் முன்னால் மண்டியிடவும் தயாராக இருப்பவர்கள். கடந்த காலத்தில் இந்தியா மீது கோபம் ஏற்படக் காரணம், அப்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவின் அழுத்தங்களுக்குப் பணிந்துபோனது தான். அவர்களுக்கு அந்த அழுத்தங்களை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கவில்லை. ஒரு அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், எந்தத் தரப்பிலிருந்தும் வரும் தேவையற்ற செல்வாக்கை முறியடிக்க முடியும்.

கேள்வி: இப்போது இந்தியாவின் அழுத்தம் இல்லையா?

பதில்: இல்லை, எமக்கு அப்படி எந்த அழுத்தமும் இல்லை. அவர்களுடன் பேசும்போது எமது கொள்கைகளைத் தெளிவாகக் கூறுகிறோம். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல் நிறுவனத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தத்துறை எமது சொத்து என்றும், இதை நாங்கள் தாரைவார்க்க மாட்டோம், அபிவிருத்தி செய்ய உதவி மட்டுமே பெறுவோம் என்றும் இந்தியத் தரப்பிடம் கூறினோம், அவர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். நாங்கள் இந்தியாவை மதிக்கிறோம், அவர்கள் எங்களை மதிக்கிறார்கள். நான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தபோது, இந்தியா இலங்கையின் விசுவாசமான நண்பன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

கேள்வி: இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது போன்ற விவகாரங்களில் இந்தியாவிடமிருந்து உங்களுக்கு அழுத்தம் வரவில்லையா?

பதில்: இத்தகைய அரசியல் விவகாரங்கள் குறித்து என்னுடன் எந்த ஆலோசனைகளும் நடத்தப்படவில்லை.

Leave A Comment