இலங்கையில் நிச்சமற்ற நிலைமைகள் தோன்றியுள்ளன; சர்வதேச நாணய நிதியம்

சமகால வெளியக அழுத்தங்களும், நிலைமாற்றமடைந்துவரும் உலகளாவிய போக்குகளும் ஏற்கனவே தீவிர நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டுவரும் இலங்கை பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மைகளைத் தோற்றுவித்திருக்கின்றன.

 இந்நிலையில் மிகக்கடின முயற்சியினால் வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் உயர் வளர்ச்சி என்பவற்றை உள்ளடக்கிய பாதையில் நாட்டின் பொருளாதாரத்தைக் கொண்டுசெல்வதற்கும் தற்போதைய மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

 சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான அதிகாரிகள் குழு கடந்த 3 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதந்திருந்ததுடன், 11 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  வரை நாட்டில் தங்கியிருந்து ஜனாதிபதி உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதிகள், இலங்கை மத்திய வங்கி ஆளுநர், திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் பரந்துபட்ட சந்திப்புக்களை நடாத்தியிருந்தனர்.

 இவ்விஜயத்தின் முடிவில் இலங்கை தொடர்பில் எவான் பபஜோர்ஜியோவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான நான்காம் கட்ட மீளாய்வுக்கு அடித்தளமாக அமையக்கூடிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம்.


சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணையளிக்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் கீழ் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்கள் ஆக்கபூர்வமான பெறுபேறுகளைத்தர ஆரம்பித்திருக்கின்றன. தீவிர நெருக்கடியின் பின்னர் கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகப் பதிவாகியுள்ளமை பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். அதேபோன்று அண்மைய சில காலாண்டுகளில் பணவீக்கம் சடுதியாகக் குறைவடைந்திருப்பதுடன், 2025 இன் முதலாம் காலாண்டில் அது -2.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடந்த மார்ச் மாத இறுதியில் மொத்த கையிருப்புக்களின் பெறுமதி 6.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. செயற்திறன்மிக்க நிதியியல் மறுசீரமைப்புக்களால் பொதுநிதி கையாளுகை வலுப்பெற்றுள்ளது.

 
அண்மையகாலங்களில் உலகளாவிய தளம்பல்கள் விரிவடைந்திருப்பதுடன், அவை நிலையற்ற நிதியியல் சந்தை நிலைமைகள் தோன்றுவதற்கு வழிகோலியுள்ளன. சமகால வெளியக அழுத்தங்களும், நிலைமாற்றமடைந்துவரும் போக்குகளும் ஏற்கனவே தீவிர நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டுவரும் இலங்கை பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மைகளைத் தோற்றுவித்திருக்கின்றன. இருப்பினும் வெளியகத் தளம்பல்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை மதிப்பீடு செய்வதற்கும், நாணய நிதியச்செயற்திட்ட அமுலாக்கத்துடன் அவற்றை உரியவாறு கையாள்வது குறித்து ஆராய்வதற்கும் மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது.

 
எது எவ்வாறிருப்பினும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும், செயற்திட்ட இலக்குகளை அடைந்துகொள்வதிலும் அரசாங்கம் உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் இருப்பது பாராட்டத்தக்கதாகும். அதேவேளை முன்நோக்கிப் பயணிக்கையில் மிகக்கடின முயற்சியினால் வென்றெடுக்கப்பட்ட அடைவுகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் உயர் வளர்ச்சி என்பவற்றை உள்ளடக்கிய பாதையில் நாட்டின் பொருளாதாரத்தைக் கொண்டுசெல்வதற்கும் தற்போதைய மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகும்.

 
மேலோங்கிவரும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் நிதியியல் இடைவெளியைப் பேணுவதற்கு நிலையான வருமானத்திரட்டல் முயற்சிகளும், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் இன்றியமையாதவையாகும்.

 
மேலும் தற்போதைய சூழ்நிலையில் வறிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாக்கவேண்டிய முக்கிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதற்கமைய அவசியமான தரப்பினருக்கான சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்துவதுடன் விரிவுபடுத்தவேண்டும்.  


அதேவேளை நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் நிபந்தனைகளை உரியவாறு பேணுவதற்கு அவசியமான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் கலந்துரையாடல்கள் தொடரும்.

Leave A Comment