ஈரான் மீதான தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மையை மீறும் செயல்; ரணில் விக்கிரமசிங்க
- Editor
- March 4, 2026
- அரசியல், தமிழ் Header
- அரசியல்
- 0 Comments
வெளிச் சக்திகளினால் ஒரு நாட்டின் மீது பலவந்தமாகத் திணிக்கப்படும் ஆட்சி மாற்றங்கள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒரு சுதந்திரமான நாட்டின் இருப்பு மற்றும் மக்களின் உரிமைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி கொண்டுள்ள நிலைப்பாடுகளுடன் இணங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி,
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் பாரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஈரானை விடவும் ஏனைய நாடுகள் அதிகளவில் எரிபொருளை விநியோகிப்பதால், உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. ஈரானின் ஹார்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்துகள் முற்றாக நிறுத்தப்பட்டால் மட்டுமே அது பாரிய பிரச்சினையாக மாறும். அவ்வாறானதொரு நிலை இதுவரை ஏற்படவில்லை.
தற்போதைய சூழலில் அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் தலைமைத்துவத்தை இல்லாது செய்யவே முயற்சிக்கின்றனர். ஈரானுக்குள் ஒரு குழப்பமான நிலையைத் தோற்றுவித்து, அங்கிருக்கும் அரசாங்கத்தை வீழ்த்தலாம் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவரை அத்தகையதொரு சூழல் அங்கு உருவாகவில்லை. ஒரு நாட்டின் தலைவர்கள் கொல்லப்பட்ட பின்னர் எஞ்சியுள்ளவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படப் போகிறார்கள் மற்றும் மக்கள் ஆதரவை எவ்வாறு திரட்டப் போகிறார்கள் என்பதே இப்போதுள்ள பிரதான கேள்வியாகும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் அரசாங்கத்தை வெளிச் சக்திகள் இவ்வாறான முறையில் பலவந்தமாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான செயற்பாடுகள் சர்வதேச ஜனநாயக விழுமியங்களுக்கும் மரபுகளுக்கும் எதிரானது என சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகளும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தனக்கு விருப்பமான முறையில் உலகை வழிநடத்த முயற்சிக்கின்றார். ஒரு நாடு மற்றுமொரு நாட்டின் விவகாரங்களில் இவ்வாறு தலையிடுவது ஆபத்தானது.
இலங்கை அரசாங்கம் தற்போதைய சூழலில் போரை நிறுத்துமாறு கோரி ஒரு சாதாரண அறிக்கையை மட்டுமே வெளியிட்டுள்ளது. இது வெறும் சம்பிரதாயமான ஒன்றாக இருக்கக் கூடாது. ஒரு சுதந்திரமான நாட்டின் இருப்பு மற்றும் மக்களின் உரிமைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி கொண்டுள்ள நிலைப்பாடுகளுடன் இணங்க முடியாது. மனித உயிர்கள் பறிக்கப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றார்.

