உயிர்த்தஞாயிறுதினக்குண்டுத்தாக்குதல்பிரதானசூத்திரதாரிசஹ்ரான்;எப்.பி.ஐ
- Editor
- April 17, 2025
- அரசியல், தமிழ் Header
- அரசியல்
- 0 Comments
அமெரிக்கப்புலனாய்வுப்பிரிவான எப்.பி.ஐ இனால் அந்நாட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியில், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குல்களின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசீம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
மொஹமட் நௌபர், மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் மற்றும் அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் ஆகிய மூவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக உதவிகளை வழங்கியதாகவும், வழங்க முற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, அமெரிக்காவின் கலிபோர்னிய மாநில மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டு புலனாய்வுப்பிரிவான எப்.பி.ஐ யின் சிறப்பு புலனாய்வு அதிகாரி மெரிலீ ஆர்.குட்வினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சத்தியக்கடதாசியிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
2020 டிசம்பர் 11 என்ற திகதியிடப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த சத்தியக்கடதாசியில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுதினத்தன்று இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து நடாத்தப்பட்ட தொடர் தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதல் தொடர்பான தடயவியல் பரிசோதனை அறிக்கைகள், சமூகவலைத்தளப்பதிவுகள், சாட்சியாளர்களின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு அமெரிக்கப் புலனாய்வுப்பிரிவினால் தயாரிக்கப்பட்டிருக்கும் இவ்வறிக்கையில், இலங்கையில் சஹ்ரான் ஹாசீம் எவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ் வலையமைப்பொன்றை முன்னெடுத்துச்சென்றார் எனவும், அவர் எவ்வாறு தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களை ஒழுங்கமைத்தார் எனவும் விபரிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இலங்கை இத்தாக்குதல்களின் உண்மைத்தன்மை தொடர்பில் வெளிப்படுத்தும் அதேவேளை, அரசியல் ரீதியான திசைதிருப்பல்களை விடுத்து உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் எனவும் அந்த சத்தியக்கடதாசியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

