ஊடகவிலாயளர்கள் மரணங்கள் தொடர்பில் விசாரணை ; அரசாங்கம்
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, ரகர் வீரர் வசிம் தாஜூதீனின் மர்ம மரணம் மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏழு சம்பவங்களுக்கு அப்பால், கடந்த காலத்தின் அனைத்து குற்றங்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். குற்றவாளிகளென கண்டுபிடிக்கப்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்தகால குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதை அரசாங்கம் ஒருபோதும் தவிர்க்காது. அவசியமான தகவல்கள் பெறப்பட்ட அல்லது விசாரணைகள் பூர்த்தியான அல்லது சிறியளவு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ள ஏழு முக்கிய சம்பவங்கள் குறித்தே, அரசாங்கம் தற்போது விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது.
ஆனால், இதன் அர்த்தம் ஏழு சம்பவங்கள் குறித்து மாத்திரம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென்பதல்ல. கடந்த காலத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
பொருளாதார குற்றங்கள், படுகொலைகள் பத்திரிகையாளர்கள் காணாமல்போனமை குறித்தும் விசாரணைகளை மேற்கொள்வோம். ரகர் வீரர் வசிம் தாஜூதீனின் மரணம், லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரதீப் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை குறித்தும் விசாரணைகளை முன்னெடுப்போம்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை குறித்து விசாரணைகள் பூர்த்தியாகிவிட்டன. நீதிமன்ற வழக்கொன்று நடைபெறுகின்றது. தற்போதைக்கு புதிய விசாரணையை ஆரம்பிக்கவேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் புதிய விசாரணைகளை முன்னெடுப் போமென்றும் அவர் தெரிவித்தார்.

