எதிர்க்கட்சித்தலைவர் சஜித்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

தித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரிடலிருந்து மீள்வதற்காக இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மக்களைச் சென்றடைய வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் வலியுறுத்தியுள்ளார். அதற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் வழங்கக்கூடிய அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சி சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்புக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் 23-12-2025அன்று  இந்திய இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்போது, அண்மையில் இலங்கையைத் தாக்கிய தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘சாகர் பந்து’ திட்டத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

அத்துடன், இந்திய அரசாங்கத்தினால் நாட்டுக்கு 100 மில்லியன் டொலர் நன்கொடையாகவும், மேலும் 350 மில்லியன் டொலர் குறைந்த வட்டி சலுகைக் கடனாகவும் என மொத்தம் 450 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டமைக்காக, இலங்கை மக்கள் சார்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் இந்திய அரசாங்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் பெரும் எண்ணிக்கையிலானோர் உயிரிழந்த போதிலும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முறையான பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை நோக்கி நகர முடியாமல் போனதாலேயே, இம்முறை இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ சூறாவளியினால் அதிகளவானோர் உயிரிழந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். இனியாவது இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நாட்டுக்குத் தேவையான சரியான பேரிடர் மேலாண்மைத் திட்டத்தையும் அமைச்சையும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைத் தாக்கிய பாரிய சூறாவளியினால் 10,000 பேர் உயிரிழந்ததுடன் 180 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர் எனக் குறிப்பிட்டார். அதன் பின்னர் புதிய பேரிடர் தடுப்புத் திட்டங்கள் மற்றும் மேலாண்மை நடைமுறைகளை முன்னெடுத்ததன் காரணமாக, 2013 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சூறாவளிகளில் இருந்து முறையே 10 இலட்சம் மற்றும் சுமார் 12 இலட்சம் மக்களைக் காப்பாற்ற முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அத்தகைய பொறிமுறைகளை இலங்கையும் இனங்கண்டு பேரிடர் பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மக்களைச் சென்றடைய வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியதுடன், அதற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் வழங்கக்கூடிய அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்தார். இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கௌரவத்துடன் கோரிக்கை விடுத்தார்.

Leave A Comment