தகவல்அறியும்உரிமைஆணைக்குழுவின்இயக்கத்தைப்பலப்படுத்துங்கள்; சமூகநீதிக்கானதேசியஇயக்கம்

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் செயற்திறன்மிக்க இயக்கத்தை சீர்குலைப்பதற்கு ஏதுவான சூழ்நிலையொன்று உருவாகியிருப்பதைக் கருத்திற்கொண்டு, அந்த ஆணைக்குழுவின் தற்போதைய நிலை தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக அவதானம் செலுத்தவேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் செயற்திறன்மிக்க இயக்கத்தை சீர்குலைப்பதற்கு ஏதுவான சூழ்நிலையொன்று உருவாகியிருப்பதைக் கருத்திற்கொண்டு, அந்த ஆணைக்குழுவின் தற்போதைய நிலை தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக அவதானம் செலுத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கடந்த மார்ச் மாதம் இராஜினாமா செய்த நிலையில், அப்பதவி வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படாமையைக் கருத்திற்கொண்டே நாம் இவ்வாறு கூறுகின்றோம். அதேபோன்று ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவியில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட ஊடக அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட பெயர் முன்மொழிவுக்கு அரசியலமைப்புப்பேரவை அனுமதியளித்திருப்பினும், அந்நியமனம் இன்னமும் இடம்பெறவில்லை.
அதேபோன்று ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கு அவசியமான சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் பற்றாக்குறை நிலவுகின்றது. இருப்பினும் சமூகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான தேவைப்பாடு மிக உயர்வான மட்டத்தில் காணப்படுகின்றது. அதேவேளை முழுமையடையாத ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தகவல்கள் சவாலுக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். அது நாட்டின் தொடர்ச்சியான நிலைத்திருப்புக்குக் கேடாகும்.
2003 ஆம் ஆண்டு அப்போதைய முழுமையான எதிர்க்கட்சியும், சிவில் சமூகமும் இணைந்து கோரிய தகவல் அறியும் உரிமைச்சட்டம் சுமார் 12 வருடங்களின் பின்னர் 2015 ஆம் ஆண்டிலேயே மக்களுக்குக் கிடைக்கப்பெற்றது. அதற்கு முன்னைய அரசாங்கத்தினால் கடுமையாக எதிர்க்கப்பட்ட அச்சட்டம், ஆரம்பத்தில் தனிநபர் பிரேரணையாகவே சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டமானது உலகளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள மூன்று சிறந்த தகவல் அறியும் உரிமைச்சட்டங்களில் ஒன்றாக சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இன்றளவிலே இலங்கை மக்கள் ஊழலுக்கு எதிராகப் பகிரங்கமாகவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்திவருவதுடன், சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குரிய முழுமையான பங்களிப்பினையும் வழங்கிவருகின்றனர். அதனை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் எதிர்வருங்காலங்களில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக முன்வைக்கப்படும் தகவல் கோரிக்கைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். குறிப்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக இந்திய – இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கையின் விபரங்களைக்கூடப் பெற்றுக்கொள்ளமுடியும் என அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. அதன்படி தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை மேலும் பலப்படுத்தி, செயற்திறன்மிக்கவகையில் இயங்கச்செய்வது உரிய அதிகாரிகளின் பொறுப்பாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Leave A Comment