தித்வாஅனர்த்தம்இருதசாப்தங்களில்இலங்கையில்நிகழ்ந்தமாபெரும்பேரழிவு; ஐக்கியநாடுகள்அறிவிப்பு

தித்வா சூறாவளியால் ஏற்பட்டுள்ள அனர்த்தமானது அண்மைய இரு தசாப்தங்களில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான பேரனர்த்தம் எனவும், இவ்வனர்த்தத்தின் விளைவாக ஏற்பட்ட தாக்கங்கள் முன்னெதிர்வுகூறப்பட்டதை விட பன்மடங்கு பெரியவை எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே, சமகாலத்தில் ஆசிய நாடுகள் பலவும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்திருப்பினும் ஒவ்வொரு நாட்டினதும் மக்கள் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் பதிவாகியிருக்கும் உயிர் மற்றும் சொத்துச்சேதங்கள் மிக உயர்வானவை எனத் தெரிவித்துள்ளார்.

எனவே இப்பேரனர்த்த நெருக்கடியினால் சரிவடையக்கூடிய நிலையில் இருக்கும் 7 பிரதான துறைகளை வலுப்படுத்துவதற்கும், மீளக்கட்டியெழுப்புவதற்குமான 4 மாதகால ‘மனிதாபிமான முன்னுரிமையளிப்புத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியிருக்கும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம், அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான 35.3 மில்லியன் டொலர் நிதியைத் திரட்டுவதற்கு நன்கொடை உதவிகளை வழங்க முன்வருமாறு உலகநாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும், அபிவிருத்திப் பங்காளிகளுக்கும் பகிரங்க அழைப்புவிடுத்துள்ளது.

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியை அடுத்து உருவான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயும், இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும், இன்னமும் முழுமையாக மதிப்பிடப்படாத பெருந்தொகை சொத்துக்கள் சேதமடைந்தும் நாடு பேரழிவுக்கு முகங்கொடுத்துள்ளது.

இப்பேரழிவில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பலதரப்பட்ட வழிகளில் தொடர் உதவிகளை வழங்கிவரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவரமைப்புக்களுடன் இணைந்து இலங்கைக்கு அவசியமான உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்குரிய விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்து, அதுபற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு 11-12-2025அன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் பி.ப 1 மணிக்கு நடைபெற்றது.

20 வருடங்களில் இலங்கை  முகங்கொடுத்த பேரனர்த்தம்


இச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே, ‘இலங்கை கடந்த 20 வருடகாலத்தில் முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான பேரனர்த்தம் இதுவாகும். அண்மைய அனர்த்தத்தின் விளைவாக சுமார் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இற்றைத் தகவல்களின்படி 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன் 200 க்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளனர். 91,000 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. சில குடும்பங்கள் தமது வீடுகளுக்கும், வேறு தங்குமிடங்களுக்கும் திரும்பியுள்ள அதேவேளை, சுமார் 85,000 க்கும் அதிகமானோர் இன்னமும் பாதுகாப்பு நிலையங்களிலேயே தங்கியுள்ளனர். இந்தத் தாக்கங்கள் முன்னெதிர்வுகூறப்பட்டதை விடவும் பன்மடங்கு பெரியவையாகும். அத்தோடு இந்த அனர்த்தம் வறிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினரை வெகுவாகத் தாக்கியுள்ளது. ஏற்கனவே நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த அவர்களது வாழ்க்கை இப்போது முழுவதுமாக சீர்குலைந்திருக்கின்றது’ எனக் கவலை வெளியிட்டார்.

ஆச்சரியமளிக்கும்  ஒருமைப்பாடு 


அதேவேளை இவ்வனர்த்தத்தை அடுத்து இலங்கையர்கள் நாடளாவிய ரீதியில் வெளிப்படுத்திய ஒருமைப்பாடும், மீண்டெழும் தன்மையும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், மறுபுறம் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள் வெளிப்படுத்திய உடன்நிற்பையும் வெகுவாக சிலாகித்தார்.

ஐ.நா 21 நாடுகளுடன்  இணைந்து உதவியது

‘இலங்கை பேரனர்த்தத்தை எதிர்கொண்ட முதலாவது நாளில் இருந்து நாம் எமது சக மனிதாபிமானப் பங்காளிகளுடன் களத்தில் நிற்கிறோம். குறிப்பாக 21 சர்வதேச நாடுகள் மற்றும் முகவரமைப்புக்களின் அனுசரணையுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரணப்பொருட்கள், தூய குடிநீர் வசதி, உடனடி சுகாதாரப் பராமரிப்பு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கிவருகிறோம். அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் சபையின் உடனடி உதவி நிதியத்தில் இருந்து இலங்கைக்கென 4.5 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டன. எமது அலுவலகத்தில் உடனடி உதவிக்குழுவொன்று பிரத்யேகமாக நிறுவப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை செய்மதி மூலம் படம் பிடிப்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தோம்’ என்றும் வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே சுட்டிக்காட்டினார்.

பேரனர்த்த தாக்கங்கள் முடிவுக்கு வரவில்லை

அதேபோன்று இந்தப் பேரனர்த்தம் நிகழ்ந்து சில தினங்கள் கடந்திருந்தாலும், அதன் தாக்கங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை எனவும், இதனைச் சீரமைப்பதற்கு இன்னும் பல விடயங்களைச் செய்யவேண்டியிருக்கிறது எனவும் நினைவுறுத்திய பிரான்சே, பாதிக்கப்பட்ட மக்களின் மீட்சிக்கு முன்னுரிமை அளித்து, நாட்டை மீளக்கட்டியெழுப்புவது பற்றிச் சிந்திக்கவேண்டும் என்றார்.

ஐ.நாவின் மனிதாபிமான முன்னுரிமையளிப்புத் திட்டம்

அதற்கமைய தற்போது கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ள ‘மனிதாபிமான முன்னுரிமையளிப்புத் திட்டம்’ உணவுப்பாதுகாப்பு, விவசாயம், குடிநீர் மற்றும் நீர்ப்பானம், கல்வி, சுகாதாரம், இருப்பிடம், குப்பை மற்றும் கழிவு அகற்றல், பாதுகாப்பு (குறிப்பாக சிறுவர்கள்) ஆகிய 7 பிரதான துறைகளை மையப்படுத்தி, அனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 658,000 பேரைச் சென்றடைவதை இலக்காகக்கொண்டு இம்மாதம் முதல் எதிர்வரும் 2026 ஏப்ரல் வரையான 4 மாதகாலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட உதவிச்செயற்திட்டமாகும். 

இத்திட்ட அமுலாக்கத்துக்கு அவசியமான 35.3 மில்லியன் டொலர்களில் இதுவரையில் சுமார் 9.5 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 26 மில்லியன் டொலர் நிதியைத் திரட்டுவதற்கான நன்கொடைகள் ஐ.நா உறுப்புநாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகள், அபிவிருத்திப் பங்காளர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்ட பரந்துபட்ட தரப்பினரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.

கடனுதவிகள் வேண்டாம் நன்கொடைகளே வேண்டும்

இதுபற்றி விளக்கமளித்த வதிவிடப்பிரதிநிதி, ‘பேரனர்த்தப் பாதிப்புக்கள் பரந்தளவானவை என்பதனால் அவையனைத்தையும் அரசாங்கத்தினால் உடனடியாக சீரமைக்கமுடியாது. இருப்பினும் அப்பாதிப்புக்கள் முழுமையாக சீரமைக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில், அவை மேலும் தீவிரமடைவதைத் தடுத்து, ஸ்திரநிலைக்குக் கொண்டுவருவதும், அதனூடாக முழுமையாக சீரமைப்பதற்கு ஏற்படும் செலவினத்தைக் குறைப்பதுமே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இவ்விடயத்தில் நாம் அரசாங்கத்துடனும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடனும் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகிறோம்.

‘அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் உடனடித்தேவைகள் தொடர்பான மதிப்பீட்டின் பிரகாரம் தேவையுள்ள தரப்பினர் அடையாளங்காணப்பட்டு, முறையான கண்காணிப்புடன், பொருத்தமான வழிமுறைகள் மூலம் உதவிகள் வழங்கப்படும். நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கென அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள நிதியம் நடுத்தர மற்றும் நீண்டகாலத்துக்குரியதாகும். இருப்பினும் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம் குறுங்காலத்துக்குரியதாகும். எனவே ஏற்கனவே கடன் சுமையில் உள்ள இலங்கை மீது மேலும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலான கடனுதவிகளின்றி, நிதியுதவிகளையும் நன்கொடைகளையும் மாத்திரம் வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்டார்.

ஆறுகளை அண்டிய  குடியேற்றங்கள் வேண்டாம்

மேலும் தற்போது வீடுகளை இழந்திருப்பவர்களில் குறிப்பாக ஆறுகளை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களை மீண்டும் அவ்விடங்களில் குடியேற்றுவதைத் தவிர்த்து, அவர்களுக்கு அரச காணிகளையோ வழங்கவோ அல்லது மாற்றுவழிகள் ஊடாகப் பாதுகாப்பான இருப்பிடங்களை வழங்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave A Comment