தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க, இஸ்மாயில் முத்து முஹம்மது, பைசர் முஸ்தபா ஆகியோர் பிரதி சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பாராளுமன்ற அமர்வு 17-12-2024 அன்று காலை 09.30 மணிக்கு பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலி தலைமையில் கூடியது. அமர்வின் முதல் பணியாக பதவி பிரமாணம் இடம்பெற்றது.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு கடந்த மாதம் 21ஆம் திகதி நடைபெற்றது.அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர். அதுவரை ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்த நான்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
கடந்த 12 ஆம் திகதி இந்தப் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.இதற்கு அமைய நான்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவர் நேற்று பிரதி சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
புதிய ஜனநாயக முன்னணிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவருடைய பெயர் அறிவிக்கப்படாதிருந்ததுடன், குறித்த பதவிக்கான பெயர் கடந்த 11ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது. இதற்கு அமைய அக்கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பைஸர் முஸ்தபா பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

