பொலிஸ்மா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை சபாநாயகருக்கு கையளிப்பு
பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிமா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் 115 பேர் கைச்சாத்திட்டு நேற்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளித்தனர்
குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிடுகையில்.
பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருக்குவது தொடர்பான பிரேரணை ஒன்றை தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் 115பேரின் கையெழுத்துடன் சபாநாயகருக்கு கையளித்தோம்.
குறிப்பாக அதிகாரிகளை பதவி நீக்கும் 2002 5ஆம் இலக்க நடைமுறைச் சட்டத்துக்கு அமைவாக சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபரை பதவி நீக்கும் ஏற்பாடுகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு வரின் கையெழுத்துடன் பிரேரணை ஒன்று சபாநாயகருக்கு கையளிக்க வேண்டி இருக்கிறது.அதன் பிரகாரம் குறித்த பிரேரணையை கையளித்தோம்.
விசேடமாக விஷமத்தனமான செயற்பாடுகள், பதவியை துஷ்பிரயோகம் செய்தமை, கடமையை சரியாக செய்ய தவறியமை, பதவியில் செயற்படும்போது மிகவும் மோசமான முறையில் பக்கச்சார்பாக நடந்துகொண்டமை போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தோம்.
சபாநாயகர் இதுதொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்றம் கூட இருக்கிறது. அன்றைய தினம் இந்த பிரேரணையை பாராளுமன்றத்துக்கு சபாநாயகர் சமர்ப்பிப்பார் என நாங்கள் நம்புகிறோம். பாராளுமன்றத்தில் இந்த பிரேரணையை அனுமதித்துக்கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு போதுமானது. என்றாலும் தேஷபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விடயம். அதனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரும் இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்.
பாராளுமன்றத்தில் பிரேரணை அனுமதிக்கப்பட்ட பின்னர் 3பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, குறித்த குழுவின் அறிக்கை சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டதும், சபாநாயகர்அ அந்த அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிப்பார். அதன் பின்னர் ஜனாதிபதி அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பார் என்றார்.

