வடக்கின் கைத்தொழில் வளா்ச்சியை முடக்கும் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் 

செல்வின் மரியாம்பிள்ளை நேர்காணல்

“கைத்தொழில் துறையில் அபிவிருத்தியை நோக்கி செல்வதற்கு வடபகுதியில் வாய்ப்புகள் பெருமளவுக்கு உள்ளது. அதனைத் தடுப்பதற்கும் முடக்குவதற்குமான திட்டமிட்ட முயற்சிகளின் தொடா்ச்சியான செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதன்மூலமாக நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வடபகுதியிலிருந்து வழங்கக்கூடியதாக இருக்கும்” என்று கூறுகிறாா் செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்விடயத்தில் அதிகளவுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்துகின்றாா். 

பொருளாதார ஆலோசகரும், ஆய்வாளரும் சமூக செயற்பாட்டாளருமான செல்வின் வடபகுதியின் பொருளாதரம் தொடா்பிலும், அது எதிா்கொள்ளும் சவால்கள் குறித்தும் “வீரகேசரி” வாரவெளியீட்டுக்கு வழங்கிய நோ்காணலிலேயே இந்த விடயங்களைத் தெரிவித்தாா். அவரது நோ்காணலின் முக்கியமான பகுதிகள் – 

கேள்வி – வடமாகாணத்தின் அபிவிருத்தி என்று சொல்லும் போது எந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீா்கள்?

பதில் – வடமாகாணத்தில் அபிவிருத்தி என்று பாா்க்கின்ற போது முதலாவதாக, ஏற்கனவே எம்மிடம் இருக்கும் விளைபொருட்கள் வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். அவை வடமாகாணத்துக்குள் வைத்தே பெறுமதி சோ் பொருட்களாக மாற்றப்பவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இப்போது அவை தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தொழிற்சாலைகளில் பெறுமதி சோ் பொருட்களாக மாற்றப்பட்டு வடபகுதியிலும் சந்தைப்படுத்தப்படுகின்றது. 

குறிப்பாக இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் வட மாகாணத்துக்குள்ளேயே களஞ்சியப்படுத்தப்பட்டு, அரிசியாக்கப்பட்டு சந்தைப்படுத்துவதற்கான திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.  ஏனென்றால், இலங்கையின் முக்கியமான ஒரு விளைநிலமாக வடபகுதி இருக்கின்றது. ஆனால், விளைபொருட்களை அப்படியே அபகரித்துக்கொண்டு சென்று, அதனை தனியுரிமையாக்கி சவால் விடுகின்ற செயற்பாடுகளில் அரிசி மாபியாக்கள் ஈடுபட்டிருக்கின்றாா்கள். 

அதேபோல, தானியங்கள் வடபகுதியில் பெருமளவுக்கு உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும், அவை தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுத்தான் பெறுமதி சோ் பொருட்களாக மாற்றப்படுகின்றது. இதுவும் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். அவை இங்கேயே களஞ்சியப்படுத்தப்பட்டு, பெறுமதி சோ் பொருட்களாக மாற்றப்பட வேண்டும். 

பால் உற்பத்தியிலும் வடபகுதி முன்னணியில் உள்ளது. இங்கிருந்து பசுப்பால் வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. அதேவேளையில், அங்கிருந்து பெருமளவு பால் மா வகைகள் இங்கு சந்தைப்படுத்தப்படுகிறது. பால் பதனிடும் கைத் தொழில் சிறிய முதலீட்டுடன் இங்கு செய்யப்படக்கூடிய ஒன்று. இவ்வாறான தொழிற்சாலைகள் இந்தியாவின் உதவியுடன் வடமாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் கட்டியெழுப்பப்பட வேண்டும். 

கேள்வி – வடபகுதியின் வளங்களில் ஒன்றான தென்னை எந்தளவுக்கு பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றது? 

பதில் – தென்னை மற்றும் பனை வளம் என்பனவும் வடபகுதிக்கு முக்கியமானது. தென்னை வளம் இங்கு முக்கியமானதாக இருக்கின்ற போதிலும், அதன் மூலமாகப் பெறப்படும் பலன் எமக்குக் குறைவாகவே இருக்கின்றது. தென்னையிலிருந்து கிடைக்கக்கூடிய உற்பத்திகள் தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்தே பெறுமதி சோ்க்கப்படுகின்றது. இதனை இங்கேயே செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மன்னாா் – கிளிநொச்சி – முல்லைத்தீவு என்று மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக தென்னை முக்கோண வலையம் ஒன்றைப் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. இதனைவிட யாழ்ப்பாணத்தையும், யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளையும் முதன்மையானதாகக் கருதி தென்னை உற்பத்தி ஊக்குவிப்பு வலையம் ஒன்றை நாங்கள் உருவாக்க முடியும். 

தென்னை இலங்கையிலும் உலகத்திலும் மிகப் பெரிய பொருளாதாரமாக மாறிக்கொண்டிருக்கின்றது. மூன்று – நான்கு வருடங்களிலேயே தென்னையிலிருந்து பலனை நேரடியாகப் பெறமுடியும். தென்னை பெருந்தோட்டமாகவும், வீட்டுத் தோட்டங்களாகவும் உருவாக்கப்பட வேண்டும். தென்னையிலிருந்து வடமாகாணம் மிகப்பெரிய பொருளாதார அநுகூலத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். 

கேள்வி – வடபகுதியில் பாரிய கடல் வளம் இருக்கின்ற போதிலும், அதன் மூலமான பலன்களை உரிய முறையில் எம்மால் பெறமுடியாமல் இருப்பது எதனால், இதற்காக என்ன செய்ய வேண்டும்?

பதில் – வடபகுதியைப் பொறுத்தவரையில் கடல்வளமும் மிகவும் முக்கியமானது. இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று கரையோர மீன்பிடி. போருக்கு முன்னா் கரையோர மீன்பிடியைச் சாா்ந்தவா்களாகவே வடபகுதி மீனவா்கள் இருந்தாா்கள். போருக்குப் பின்னா் அவா்களில் ஒரு பகுதியினா் அதிலிருந்து வெளியேறிவிட்டனா். அதேவேளையில் ஏனைய வாழ்வாதாரத்தில் தங்கியிருந்த மக்கள் சிலா் தமக்கான வாழ்வாதாரமாக கரையோர மீன்பிடித்துறைக்குள் வந்திருக்கின்றாா்கள். 

அதனால், கரையோரப் பகுதிகளில் மக்கள் அதிகரித்துள்ளாா்கள். ஆனால், வளங்கள் குறைந்திருக்கின்றது. அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட கடலட்டைப் பண்ணைகள், மற்றும் இறால் பண்ணைகளால் மீன் வளங்கள் பெருமளவுக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

கடலட்டைப் பண்ணைகள் கரையோர மீன்பிடியைப் பாதிக்காத வகையில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். அதேவேளையில் கரையோர மீன்படி என்பது அந்த மக்களுடைய வாழ்வாதாரத்துக்கும், உள்ளூா் தேவைகளுக்குமானதாகவே இருக்கும். 

அதேவேளையில், ஆள்கடல் மீன்பிடித் திட்டம் ஒன்றை நாம் ஆரம்பிக்க வேண்டும். இதற்கான சில கம்பனிகளை உருவாக்கி ஆழ்கடல் மீன்படிப் படகுகளைப் பயன்படுத்த வேண்டும். காரைநகா் சீநோா் மீன்பிடிப் படகுகளை அமைக்கும் நிறுவனம் இந்திய உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது. பலநாள் படகுகளை நாம் பெருமளவுக்குக் கொண்டுவந்து எமது புலம்பெயா் சமூகத்துடன் இணைந்து மீன்பிடி – மீன்பிடிக் கைத் தொழில் கம்பனிகள் உருவாக்கப்பட வேண்டும். 

இதன்மூலமாக இளைஞகள் பயிற்றுவிக்கப்பட்டு இந்தத் துறையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். பலநாள் படகுகளுக்கு வசதிகளைச் செய்து கொடுக்கத்தக்க வகையில், மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலமாக பெருமளவு பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். 


கேள்வி – கைத் தொழில் துறையைப் பொறுத்தவரையில் வடபகுதியில் எவ்வாறான வாய்ப்புக்கள் உள்ளன? பல தொழிற்சாலைகள் இன்னும் முடக்கப்பட்ட நிலையில்தானே உள்ளன?

பதில் – கைத்தொழில் துறையைப் பொறுத்தவரையில் போருக்கு முன்னா் சுமாா் 65 ஆயிரம் முதல் 85 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பை உற்பத்தி செய்த ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்கள் இன்று அரசாங்க உப்புக் கூட்டுத்தாபனத்தினால் முடக்கப்பட்டிருக்கின்றது. அவா்கள் இப்போது – அதாவது 2025 ஆம் ஆண்டில் 25 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பை உற்பத்தி செய்யலாமா என்று இலக்கு வைத்துள்ளாா்கள். 

போருக்கு முன்னரே பாரம்பரிய முறையில் 85 ஆயிரம் மெற்றிக் தொன் வரையிலான உப்பை உற்பத்தி செய்த ஆனையிறவு உப்பளத்தை எடுத்து முடக்கிப் போட்டுவிட்டு, இப்போது 25 ஆயிரம் மெற்றிக் தொன்னை இலக்கு வைப்பதென்றால், இது ஒரு மிகப்பெரிய சதி முயற்சி. 

அதேவேளையில் புத்தளத்திலும், அம்பாந்தோட்டையிலும், திருமலையிலும் உள்ள உப்பளங்களை தனியாா் துறைகள்தான் கையாள்கின்றன. அப்படியிருக்க இங்கு ஆனையிறவில் இவா்கள் ஏன் கையாள வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுகின்றது. இதனைக் கையாள்வதற்கு புலம்பெயா் சமூகத்தின் முதலீடுகள் தயாராக இருக்கின்றன. 

அவா்கள் பல சந்தா்ப்பங்களில் அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்திருக்கின்றாா்கள். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தென்னிங்கையால் ஏதோ காரணங்களைக் காட்டி முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இந்த உப்பளங்களைக் கையாளும் பொறுப்பை புலம்பெயா் முதலீட்டாளா்களிடம் கொடுத்தால் தேசிய பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பை அதன் மூலமாக வழங்கக்கூடியதாக இருக்கும். 

உப்புக் கைத்தொழில் வடபகுதியில் மிகப்பெரிய பொருளாதார வளமாக இருக்கின்றது. இதன் பலனை முழுமையாகப் பெற வேண்டுமாக இருந்தல், இதனை கையாளும் பொறுப்பை புலம்பெயா் முதலீட்டாளா்களிடம் கொடுக்க வேண்டும். இதனையிட்டு வடமாகாண ஆளுநரும், கடற்றொழில் அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும். 

வடபகுதியில் பாரிய கைத்தொழில்களாக இருந்த உப்புக் கைத்தொழில், பரந்தன் இரசாயணத் தொழிற்சாலை,  சீமெந்துத் தொழிற்சாலை, ஓட்டுத் தொழிற்சாலை என்பனவெல்லாம் ஒரு வகையில் திட்டமிட்டு முடக்கப்பட்டவைகளாகத்தான் நான் கருதுகின்றேன். 

ஏனென்றால், ஆனையிறவு உப்பளத்தில் போா்க் காலத்திலும் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது.  விடுதலைப் புலிகளும் இங்கு உப்பு உற்பத்தியை மேற்கொண்டாா்கள். அவா்கள் உப்பளத்தை அழிக்கவில்லை. அவா்கள் அங்கிருந்து உப்பை எடுத்து யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் அயடீன் சோ்த்து வன்னியில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்கு வழங்கினாா்கள். ஓட்டுத் தொழிற்சாலையும் இவ்வாறு முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. 

சீமெந்துத் தொழிற்சாலை கூட, சுன்னாம்புக் கற்களை அகழ்ந்து இயற்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல், டோக்கியோ சீமெந்து செய்வது போல வெளிநாட்டில் இருந்து மூலம்பொருட்களைக் கொண்டுவந்து இங்கு வைத்து அரைத்துப் பொதி செய்வதற்கான இடமாக அதனைப் பயன்படுத்தப்படலாம். அருகிலேயே காங்கேசன்துறை துறைமுகம் இருப்பது இதற்கு மிகவும் பொருத்தமானது. 

துறைமுகத்தில் இதற்கான களஞ்சியசாலைகளை அமைக்க முடியும். இதற்காக தனியாா் துறை முன்வந்த போதிலும், அதற்கான சில ஆவணங்கள் கொழும்பில் தேங்கியிருப்பதாக அறிய முடிகின்றது. அவா்கள் சூழலியல் காரணங்களை அல்லது வேறு காரணங்களைக் கூறி, இதனை முடக்குவதில் குறியாக இருக்கின்றாா்கள்.      

இதுபோன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். இவைபோன்றன வடபகுதியில் கைத்தொழில் முயற்சிகளை முடக்கின்ற செயற்பாடுகளின் தொடா்ச்சியாகத்தான் நான் பாா்க்கின்றேன். தற்போது பதவிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த முடிச்சுகளை அறுத்து, இவை அனைத்தையும் உள்ளூா் முதலீட்டுக்கான திட்டங்களாகக் கையளிக்கப்பட வேண்டும்.  வடபகுதியின் கைத் தொழில் முயற்சிகளை முறியடிப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற இது செயற்பாடுகளைத் தடுப்பதற்கு ஆளுநா், அமைச்சா்கள் முன்வரவேண்டும். 

நன்றி: வீரகேசரி

Leave A Comment