பயங்கரவாதத்தடைச்சட்டம் சமரசமின்றி உடன் நீக்கப்படவேண்டும்; சுமந்திரன்
- Editor
- March 5, 2026
- அரசியல், தமிழ் Header
- அரசியல்
- 0 Comments
பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது எனவும், புதிய சட்ட உருவாக்கத்தை அதனுடன் இணைத்து நோக்கக்கூடாது எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் காலப்பகுதி கடந்த 28 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்திருக்கின்றது.
பயங்கரவாத ஒழிப்புக்கென பிரத்யேக சட்டங்கள் எவையும் அவசியமில்லை என்பதுடன், அவற்றை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொதுச்சட்டங்களின் ஊடாகக் கையாளமுடியும் என்ற நிலைப்பாட்டையே தேசிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் வெளிப்படுத்திவரும் நிலையில், பயங்கரவாத செயற்பாடுகளைக் கையாள்வதற்கு பிறிதொரு சட்டம் உருவாக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.
இதுகுறித்துக் கருத்துரைத்த சுமந்திரன், பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது எனவும், புதிய சட்ட உருவாக்கத்தை அதனுடன் இணைத்து நோக்கக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.
அதேவேளை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பிரத்யேக சட்டமொன்று அவசியமில்லை என்பதே எமது கொள்கை ரீதியிலான நிலைப்பாடு எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கு விசேட சட்டமொன்று அவசியம் என அரசாங்கம் கருதுமேயானால், அதுசார்ந்து அரசாங்கம் வெளியிடும் வரைவுகள் உள்ளிட்ட சகல செயன்முறைகளிலும் நாம் பங்கெடுப்போம் எனத் தெரிவித்தார்.
மேலும் சட்ட உருவாக்கச் செயன்முறைகளிலிருந்து ஒதுங்கி இருக்காமல், அவற்றின் பங்கெடுப்பதன் ஊடாக மாத்திரமே அச்சட்டம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமைவதை உறுதிப்படுத்தமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

