பிற்போடப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய – இலங்கை கூட்டு ஆணைக்குழு சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இம்மாதம் நாட்டுக்கு வருகைதரவிருந்த நிலையில், ‘தித்வா‘ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்த்ததின் விளைவாக அவ்விஜயம் பிற்போடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு என்பது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஒத்துழைப்பு உடன்படிக்கையின் அமுலாக்கத்தை மேற்பார்வை செய்வதுடன் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், மனித உரிமைகள், ஆட்சியியல் நிர்வாகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பன தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடும் ஒரு கட்டமைப்பாகும். இக்கட்டமைப்பின் சந்திப்பில் குறிப்பாக இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு தொடர்பிலும் ஆராயப்படும்.

அதன்படி ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பு கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ப்ருசேல்ஸில் நடைபெற்ற நிலையில், இவ்வருடம் அதனைக் கொழும்பில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதற்கமைய மேற்படி கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பில் பங்கேற்பதற்காக இம்மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வருகைதரவிருந்தனர்.

இருப்பினும் கடந்த நவம்பர் மாத இறுதியில் ‘தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து, கூட்டு ஆணைக்குழு சந்திப்பை பிற்போடுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அச்சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

Leave A Comment