ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்இலங்கை குறித்து இணையனுசரணை நாடுகள் விசனம்


நிலைமாறுகால நீதி, இனவாதத்தை முடிவுக்குக்கொண்டுவரல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி முக்கிய வாக்குறுதிகளை வழங்கியிருப்பினும், இவ்விடயங்களில் எட்டப்பட்டிருக்கும் ஆக்கபூர்வமான பெறுபேறுகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதாக பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடரில் சுட்டிக்காட்டியுள்ளன.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தீர்மானத்தை மேலும் இரு வருடகாலத்துக்கு காலநீடிப்பு செய்து நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதன்பிரகாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 63 ஆவது கூட்டத்தொடரிலும், விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 66 ஆவது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (3) நடைபெற்ற பேரவை அமர்வில் பிரித்தானியா, கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா ஆகிய இணையனுசரணை நாடுகள் சார்பில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உரையாற்றிய பிரித்தானியாவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான தூதுவர் எலெனர் சான்டர்ஸ், அங்கு மேலும் கூறியதாவது:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியினால் இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த இழப்புக்கள் தொடர்பில் எமது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்துகின்றோம்.

அதேவேளை உள்நாட்டு மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு சகல சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகயைப் பெரிதும் வரவேற்கின்றோம். நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு நினைவுகூரல் மிக அவசியம் என்பதுடன், இவ்விடயத்தில் தொடர்ந்து முன்னேற்றம் எட்டப்படுவதை ஊக்குவிக்கின்றோம்.

அதேபோன்று பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படுவதுடன், அதுவரை அச்சட்டம் பிரயோகிக்கப்படக்கூடாது என்ற எமது நிலைப்பாட்டை மீளவலியுறுத்துகின்றோம். அத்தோடு தற்போது புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தை விடவும் மிகையான கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான எந்தவொரு சட்டமும் இலங்கையின் மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு உட்பட்டவையாக அமையவேண்டும்.

அடுத்ததாக படையினர் வசமிருந்த சில காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பினும், இச்செயன்முறை மிகவும் மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றது. மறுபுறம் நிலைமாறுகால நீதி, இனவாதத்தை முடிவுக்குக்கொண்டுவரல் மற்றும் மிகமுக்கிய மனித உரிமைகள்சார் வழக்குகள் என்பவற்றை உரியவாறு கையாள்வதற்கான கடப்பாட்டை ஜனாதிபதி வெளிப்படுத்தியிருப்பது குறித்து அவதானம் செலுத்தியிருக்கின்றோம். இருப்பினும் இவ்விடயங்களில் ஆக்கபூர்வமான பெறுபேறுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. முக்கிய கட்டமைப்புக்கள் இன்னமும் பலவீனமான நிலையிலேயே இருப்பதுடன் சாட்சியாளர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.

இந்நிலைகளில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு வலுவானதும், சுயாதீனமானதுமான உள்ளகப்பொறிமுறைகள் இன்றியமையாதவையாகும். அதற்கமைய ஏற்கனவே திட்டமிடப்பட்ட சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் நிறுவப்படவேண்டும்.

நிறைவாக இலங்கையில் மோதல் காலப்பகுதியில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டமைக்கு தெரிவிக்கின்றோம். இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் சார்ந்த சட்டப்பாதுகாப்பை வலுப்படுத்தி, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை உறுதிப்படுத்துவதில் சகல தரப்பினருடனும் இணைந்து செயற்படுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

Leave A Comment